ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றநிலை மோசமடைவதை முன்னிட்டு சிங்கப்பூரின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.
சனிக்கிழமை (ஜூன் 28) நீ சூன் வட்டாரத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு ஒன்றில் அவர் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
“சண்டை நிறுத்தம் நடப்பில் உள்ளது. ஆனால் அதற்குப் பிறகு என்ன நடக்கும் எனத் தெரியவில்லை,” என்றார் அவர்.
இந்த வட்டார நாடுகள், மற்ற வட்டார நாடுகளைச் சேர்ந்த சிலரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தோரும் இஸ்ரேல், அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான சொத்துகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.
அதுமட்டுமல்லாது, முஸ்லிம்களுக்கு எதிராக வலதுசாரிகளும் தாக்குதல் நடத்தக்கூடும் என்றார் அவர்.
சிங்கப்பூர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது உலகெங்கும் பெரிய செய்தியாக அமையும் என்று திரு சண்முகம் கூறினார்.
எனவே, சிங்கப்பூரின் பாதுகாப்பை வலுப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பல்வேறு சாத்தியக்கூறுகளைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார் உள்துறை அமைச்சருமான அமைச்சர் சண்முகம்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், என்ன நடக்கும் என்று யாராலும் துல்லியமாகக் கூறிவிட முடியாது என்றார் அவர்.
ஈரானிய அணுவாயுத ஆலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்திய பிறகு சந்தேகத்துக்குரிய அல்லது தீவிரவாதப் போக்கு கொண்டு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளனவா என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் சண்முகம், சிங்கப்பூரில் இதுவரை அப்படி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறினார்.
ஆனால் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிடுவோர், தங்கள் இலக்கை அடைய ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே அவர்களுக்குப் போதுமானது என்று திரு சண்முகம் எச்சரிக்கை விடுத்தார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரது பொறுப்பாகும் என்றும் உத்தேச பாதுகாப்பு மிரட்டல்களைப் பற்றி சிங்கப்பூரர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சண்முகம் நினைவூட்டினார்.