ஆசியாவில் கப்பல் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவிய போதிலும், உலகின் மிகப்பெரிய கப்பல் எரிபொருள் நிரப்பும் நடுவமான சிங்கப்பூர், மார்ச்சில் தமது விற்பனையில் சிறிய அளவிலான வளர்ச்சியைக் கண்டது.
கடந்த மாதத்தில் கப்பல் எரிபொருள் விற்பனை கிட்டத்தட்ட 4.8 மில்லியன் டன்களாக இருந்தது என்றும் பிப்ரவரி மாதத்தின் விற்பனையோடு ஒப்பிடுகையில் அது 1.9 விழுக்காடு அதிகம் என்றும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரியில், கிட்டத்தட்ட 4.7 மில்லியன் டன் கப்பல் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, எரிபொருள் விற்பனை 6.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதனால், உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு இருந்தபோதிலும், சிங்கப்பூர் துறைமுகத்திற்கு வந்த எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது.
இவ்வாண்டு மார்ச் மாதம் மட்டும் 1,651 எண்ணெய் கப்பல்கள் சிங்கப்பூர்த் துறைமுகத்திற்கு வந்ததாக ஆணையம் கூறியது. அந்த எண்ணிக்கை பிப்ரவரி மாதம் 1,503ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூர் ஒரு நம்பகமான எரிபொருள் நடுவமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

