வட்டாரக் கட்டமைப்பைத் தொடங்கும் சிங்கப்பூரின் ஒரே கடல்சார் ஆய்வகம்

வட்டாரக் கட்டமைப்பைத் தொடங்கும் சிங்கப்பூரின் ஒரே கடல்சார் ஆய்வகம்

1 of 2
படம்: சாவ்பாவ்
படம்: சாவ்பாவ்

25 Nov 2026 - 5:58 pm

2 mins read

தென்கிழக்காசியாவின் கடற்பகுதிகள் அதிக வெப்பமடைந்துவரும் நிலையில், இவ்வட்டாரத்தின் பல்லுயிர் வளம் நிறைந்த கடல் நீரைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் சிங்கப்பூரின் ஒரே கடல்சார் ஆராய்ச்சி நிலையம் ஒரு வட்டாரக் கட்டமைப்பை நிறுவிவருகிறது.

இதுவரை ஐந்து ஆசியான் நாடுகளை ஒன்றிணைத்துள்ள அந்தத் ‘தென்கிழக்காசிய கடல்சார் ஆராய்ச்சி நிலையங்களின் கட்டமைப்பு’, கடல் வெப்ப அலைகள் அதிகமாகவும் தீவிரமாகவும் ஏற்பட்டுவரும் சூழலில் நிறுவப்பட்டுள்ளது. அடுத்த பெரிய கடல் வெப்ப அலை 2027ஆம் ஆண்டில் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிலையம், தனது 10ம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற கடல்சார் அறிவியல் வாரத்தின் தொடக்க விழாவில், அந்தக் கட்டமைப்புக்குத் தலைமைதாங்குவதாக அறிவித்தது. முன்னதாக, அந்த ஆராய்ச்சி நிலையம் செயின்ட் ஜான்ஸ் தீவு தேசிய கடல்சார் ஆய்வகம் என்று அழைக்கப்பட்டது.

அந்த வட்டாரக் கட்டமைப்பை அதிபர் தர்மன் சண்முகரத்னம் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

“பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, நமது பெருங்கடல்களின் ஆரோக்கியம் ஆகியவை தனித்தனி பிரச்சினைகள் அல்ல; அவை ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய கட்டமைப்பு தென்கிழக்காசியா முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து, ஒருவர் மற்றொருவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் நமது கடல்களைப் பாதுகாக்கும் கூட்டுத் திறனை வலுப்படுத்தவும் உதவும்.

“இது வரும் ஆண்டுகளில் மேலும் முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாக இருக்கும்,” என்று அதிபர் தர்மன் கூறினார். இதுவரை சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கடல்சார் ஆராய்ச்சி நிலையங்கள் அந்தக் கட்டமைப்பில் இணைந்துள்ளன.

தனது புதிய பொறுப்பின் ஒரு பகுதியாக, அந்த ஆராய்ச்சி நிலையம் தென்கிழக்காசியா முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களை வரவேற்கும். இதன் மூலம், இவ்வட்டாரத்தின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கடல்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களைச் சமாளிக்க, இங்கிருக்கும் வசதிகள், தரவுகள், நிபுணத்துவம் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குறிப்புச் சொற்கள்