சிங்கப்பூரின் வெற்றி கடின உழைப்பால் வந்தது: பிரதமர் லாரன்ஸ் வோங்

2 mins read
9a51a338-90f2-4080-8b70-5b60f512d12d
சிங்கப்பூரின் பிரிவினை பற்றிய கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் லாரன்ஸ் வோங். உடன் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ - படம்: லாரன்ஸ் வோங் / ஃபேஸ்புக்

சிங்கப்பூர் வெற்றி பெறுவதற்கு அதன் கடின உழைப்பே காரணம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் செழிப்பான நாடாக உருவாகும் என்று ஒருபோதும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை, மாறாக கடின உழைப்பு வெற்றியைப் பெற்றுத் தந்தது என்றார் அவர்.

தெளிவான தலைமைத்துவம், துணிச்சல், தேசிய நலனில் ஒருமித்த கவனம் போன்ற பண்புகள் நாட்டை வழிநடத்த வேண்டும். அப்போதுதான் நாடு தொடர்ந்து செழிப்படையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய நூலகத்தில் நடைபெறும் ‘அல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர் சுதந்திரம் பற்றி அறியாத செய்திகள்’ என்ற கண்காட்சியைப் பற்றி டிசம்பர் 10ஆம் தேதி அவர் ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

“இன்று நாம் எஸ்ஜி60ஐ கொண்டாடுகிறோம். இன்று பெருமிதத்துடன் நிற்கிறோம். ஆனால் சில விவகாரங்கள் வேறு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

“இவையெல்லாம் ஆழமான உண்மையைப் புலப்படுத்துகின்றன. சிங்கப்பூரின் உயிர்வாழ்வுக்கும் வெற்றிக்கும் ஒருபோதும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. தெளிவான பார்வை கொண்ட தலைமைத்துவமும், துணிச்சலும் தேசிய நலனில் அசைக்கமுடியாத நம்பிக்கையுமே வெற்றிக்கு வழிவகுத்தது,” என்று பிரதமர் வோங் மேலும் தெரிவித்தார்.

1964ல் அப்போதைய நிதியமைச்சரான கோ கெங் சுவீ, சிங்கப்பூரின் சுதந்திரம் பற்றிய ஆவணங்களை வெளியிடாமல் பாதுகாத்து வைத்திருந்தார். அதில் சிங்கப்பூரை மலேசியாவிலிருந்து பிரிப்பதற்காக மலேசியத் தலைவர்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து எழுதப்பட்ட குறிப்புகளும் அடங்கும்.

இந்தக் கோப்புகளும் ஆவணங்களும் தற்போது வெளியிடப்பட்டு,’அல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் பற்றி அறியாத செய்திகள்’ என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் பிரிந்ததைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் வோங், 1964ஆம் ஆண்டின் கலவரத்திற்குப் பிறகு இணைந்து இருப்பது சரியாக வராது என்று இரு தரப்பு தலைவர்களும் தெளிவாக உணர்ந்தனர் என்றார்.

“இருந்தாலும் அந்தக் காலத்தின் ஆழமான கருத்து வேறுபாடுகளுக்கு இடையே இந்தப் பிரிவினை அமைதியான முறையில் இடம்பெற்றது,” என்று திரு வோங் கூறினார்.

அல்பட்ராஸ் கோப்புகள் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்