சிங்கப்பூரின் வரி வருவாய் 17% அதிகரிப்பு; மொத்த வரி வசூல் $80.3 பில்லியன்

2 mins read
b9397ffc-458b-49f6-ab12-60285b28ed2b
நிறுவனங்கள் மூலமான வருமான வரி $5.9 பில்லியன் அதிகரித்து $29 பில்லியன் ஆனது.  - கோப்பு படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வரிவசூலிப்பு 17 விழுக்காடு அதிகரித்துள்ளது. பொருளியல் வளர்ச்சி, சம்பளம் அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வரி வருவாய் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது.

2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (ஐராஸ்) மொத்தம் $80.3 பில்லியனை வசூலித்தது.

இது கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் 17 விழுக்காடு அதிகம்.

2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் $68.6 பில்லியன் வரி வசூலானது.

ஆக அண்மைய நிதி ஆண்டின் வரி வசூல் அரசாங்கத்தின் நடைமுறை வருவாயின் 77.6 விழுக்காட்டையும் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 11.9 விழுக்காட்டையும் பிரதிநிதிப்பதாக ஆணையம் புதன்கிழமை (செப்டம்பர் 4) கூறியது.

சிங்கப்பூரில் வரி செலுத்தும் போக்கு தொடர்ந்து அதிகமாக இருக்கும் வேளையில், செலுத்த வேண்டிய கடப்பாட்டுக்கு இணங்காமல் வரி செலுத்தாத ஒருசிலருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தொடர்ந்து விழிப்புநிலை கடைப்பிடிக்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்தது.

ஆக அண்மைய நிதி ஆண்டில் 9,590 சம்பவங்களைக் கணக்காய்வு செய்து விசாரித்ததாகவும் செலுத்தப்பட வேண்டிய வரிகள் மற்றும் அபராதத் தொகையாக, அந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்களிடம் இருந்து $857 மில்லியன் வசூலிக்கப்பட்டதாகவும் அது கூறியது.

கடந்த நிதி ஆண்டில் அவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகை ஏறத்தாழ $500 மில்லியன் .

எல்லாவிதமான வரிகள் மூலமாகவும் வருவாய் அதிகரித்துள்ளது.

நிறுவனங்கள் மூலமான வருமான வரி $5.9 பில்லியன் அதிகரித்து $29 பில்லியன் ஆனது. நிறுவனங்களின் வருவாய் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து அதற்கான வரியும் அதிகரித்தது.

ஆணையத்தின் மொத்த வருவாய் வசூலிப்பில் நிறுவன வருமான வரி 36.1 விழுக்காடாக அதிகரித்தது. கடந்த நிதி ஆண்டில் அந்த விகிதம் 33.7 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்