சிங்கப்பூரின் வெப்பம் இவ்வாண்டில் ஆகக் குறைந்த நிலையைத் தொட்டது

சிங்கப்பூரின் வெப்பம் இவ்வாண்டில் ஆகக் குறைந்த நிலையைத் தொட்டது

2 mins read
e2d51740-8664-41ff-928e-d33604f1d2d6
வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தொடர்ந்து பெய்த கனத்த மழை, நீண்டகாலம் நிலவிய வெப்பமான வானிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் வெப்பநிலை இவ்வாண்டில் ஆகக் குறைவான அளவை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து பெய்த கனத்த மழை, நீண்டகாலம் நிலவிய வெப்பமான வானிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது. எல் நினோ பருவநிலைக்கும் வெப்பமான காலத்துக்கும் தொடர்புண்டு.

தீவில் ஆகக் குறைவாகப் பதிவான வெப்பநிலை, 20.1 டிகிரி செல்சியஸ். அது, நியூட்டன் வானிலை நிலையத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மணி 12.52க்குப் பதிவானது.

சிங்கப்பூர் வானிலை ஆய்வகத்தின் இணையத்தளத் தரவுகளில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாண்டில் இதற்கு முன்னர் பதிவான ஆகக் குறைந்த வெப்பநிலை, பிப்ரவரி 19ஆம் தேதி இரவு மணி 9.12க்கு நியூட்டனில் பதிவானது. வெப்பநிலை அப்போது 20.3 டிகிரி செல்சியசாக இருந்தது.

வெள்ளிக்கிழமை காலை, தீவு முழுதும் கிட்டத்தட்ட நண்பகல் வரை பெருமழை கொட்டித்தீர்த்தது.

பாலஸ்டியர், பாய லேபார் வட்டாரங்களில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தேசியத் தண்ணீர் அமைப்பான ‘பியுபி’ எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்தது.

முற்பகல் 11 மணியிலிருந்து ஏறக்குறைய பிற்பகல் 12.30 மணிவரை, தீவின் தென், கிழக்கு, மேற்கு, மத்திய வட்டாரங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் முன்னுரைத்திருந்தது.

அந்த நேரத்தில் காணப்பட்ட மேகமூட்டமான வானிலை தொடர்பான நிழற்படங்களையும் காணொளிகளையும் இணையவாசிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பதிவிட்டிருந்தனர்.

இதற்கு முன்னர், எல் நினோ, இந்தியப் பெருங்கடல் இருமுனைப் பருவநிலை மாற்றங்களின் காரணமாக, ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் வழக்கத்தைவிட வெப்பமான, வறண்ட சூழல் நிலவும் என்று கணிக்கப்பட்டிருந்தது. சென்ற மாதம் (மே) 29ஆம் தேதி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றிருந்தது.

ஜூன் மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை, 6ஆம் தேதி பிற்பகல் மணி 2.49க்குப் புலாவ் உபின் பகுதியில் 35.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது.

எல் நினோ, பசிபிக் பெருங்கடலிலும் வளிமண்டலத்திலும் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடைய, இயற்கையாக நிகழும் பருவநிலை மாற்றம்.

எல் நினோ நிகழ்வுகள் பெரும்பாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் சிங்கப்பூரின் மழைப்பொழிவில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி, வறண்ட சூழல் உருவாவதற்கான சாத்தியத்தைக் கூட்டுகிறது. இத்தகைய பருவநிலை, சிங்கப்பூருக்கு அதிக வெப்பத்தையும் கொண்டுவருகிறது.

இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை என்பது எல் நினோ போன்றதுதான். ஆனால் இது இந்தியப் பெருங்கடலில் உருவாகிறது. இது, பொதுவாக டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் முடிவுக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வெப்பநிலைநியூட்டன்