சிங்கப்பூரின் ஊழியர் சந்தையில் ஒட்டுமொத்த வேலைகளின் விகிதம் கூடியுள்ளது. ஆட்குறைப்பு விகிதம் தொடர்ந்து நிலையாக இருக்கிறது.
இரண்டாம் காலாண்டில் இங்குள்ள வேலைகளின் எண்ணிக்கை 8,400 அதிகரித்தது. ஒப்புநோக்க முந்திய காலாண்டில் 2,300 வேலைகள் கூடின. 2024ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் வேலைகளின் எண்ணிக்கை 7,700 உயர்ந்திருந்தது.
சிங்கப்பூர்வாசிகள், மற்றவர்கள் என இரு தரப்பினருக்குமே வேலைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. மனிதவள அமைச்சு புதன்கிழமை (ஜூலை 30) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாம் காலாண்டில் கூடிய வேலைகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் குறைவு. அப்போது 11,300 வேலைகள் அதிகரித்திருந்தன.
இருப்பினும் ஊழியர் சந்தை வலுவாக இருப்பதை அண்மைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அமைச்சு குறிப்பிட்டது. பொருளியல் தொடர்ந்து வளர்ச்சி கண்டுவருவதை அது சுட்டியது.
நிதி, சுகாதார, சமூகச் சேவைத் துறைகளில் சேரும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தது. ஆயினும் நிபுணத்துவச் சேவைகள், தகவல், தொடர்பு போன்ற துறைகளின் வேலைகளின் எண்ணிக்கை மேலும் குறைந்தது. சில்லறை வர்த்தகத் துறையும் சரிவைச் சந்தித்தது.
இங்கு வேலை செய்யும் சிங்கப்பூர்வாசி அல்லாத மற்றவர்களின் எண்ணிக்கை கூடியதற்குக் கட்டுமானத் துறையில் வேலை அனுமதிச் சீட்டை வைத்திருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை உயர்ந்தது முக்கியக் காரணமாக அமைந்தது. நிர்வாக, துணைச் சேவைத் துறைகளில் பணிபுரியும் அத்தகையோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
சிங்கப்பூரர்களிடையே வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 3 விழுக்காடாக இருந்தது. நிரந்தரவாசிகளைப் பொறுத்தவரை அது 2.9 விழுக்காடு.
தொடர்புடைய செய்திகள்
ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கு இடையில் 3,500 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாயினர். பெரும்பாலான துறைகளில் அந்த எண்ணிக்கை அதே அளவு அல்லது அதைவிடக் குறைவாக இருந்தது. நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளைச் சீரமைப்பதே ஆட்குறைப்புக்கு முக்கியக் காரணம் என்று அமைச்சு தெரிவித்தது.
சம்பளத்தை உயர்த்த எண்ணியிருக்கும் நிறுவனங்களின் விகிதமும் 24.4 விழுக்காட்டிலிருந்து 22.4 விழுக்காட்டுக்குக் குறைந்தது.