சிங்கப்பூரின் மொத்த கருத்தரிப்பு விகிதம் நிலைபெறவில்லை: துணைப் பிரதமர்

2 mins read
25a0b40f-9830-49a5-9674-214c30f3e53a
கொள்கை ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் ஜனதாஸ் தேவனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துகளைப் பரிமாறிய துணைப் பிரதமர் கான் கிம் யோங் (இடது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2024ஆம் ஆண்டு, அதற்கு முந்திய ஆண்டடைக் காட்டிலும் குறைந்துவிடாமல் சீராக இருந்த சிங்கப்பூரின் மொத்த கருத்தரிப்பு விகிதம் (TFR) நிலைபெற்றுவிட்டதாகப் பலரும் கருதுகிறார்கள். ஆனால், அது இன்னும் நிலைபெறவில்லை. அதனை நிலைப்படுத்த எதுவும் செய்யாவிடில் நாட்டின் குடிமக்கள் எண்ணிக்கை சுருங்கிவிடும்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குடிமக்களின் மொத்த மக்கள்தொகை சரிவது சிங்கப்பூரின் துடிப்பையும் போட்டித்தன்மையுடன் நீடிக்கும் திறனையும் பாதித்துவிடும் என்றார் அவர்.

2024ஆம் ஆண்டு கடல்நாக ஆண்டாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது சிங்கப்பூரின் மொத்த கருத்தரிப்பு விகிதம் அதிகரித்தது.

அதன் ஆக அண்மைய விவரத்தைத் திரட்டும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என்று கொள்கை ஆய்வுக் கழகத்தின் (IPS) வருடாந்திர ‘சிங்கப்பூர் கண்ணோட்டம்’ மாநாட்டில் திரு கான் தெரிவித்தார்.

கழகத்தின் இயக்குநர் ஜனதாஸ் தேவனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து கூறிய துணைப் பிரதமர், “மொத்த கருத்தரிப்பு விகிதம் என்னும் அம்சத்தில் என்னால் நல்ல செய்தியைக் கொடுக்க இயலவில்லை என்பதை நான் சொல்லியே ஆகவேண்டும்,” என்றார்.

மாநாடு திங்கட்கிழமை (ஜனவரி 26) சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மொத்த கருத்தரிப்பு விகிதம் என்பது ஒவ்வொரு பெண்ணும் தமது இனப்பெருக்க ஆண்டில் பெற்றிருக்க வேண்டிய சராசரி குழந்தை எண்ணிக்கையைக் குறிக்கிறது.

அந்த விகிதம் 2024ஆம் ஆண்டு 0.97ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டின் எண்ணிக்கையிலிருந்து சரிந்துவிடாமல் அது சீராக இருந்தது.

சீனர்களின் பஞ்சாங்கப்படி, கடல்நாக ஆண்டில் அதிகக் குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில், “கடல்நாக ஆண்டில் சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பது வழக்கம். ஆனால், 2023ஆம் ஆண்டின் மொத்த கருத்தரிப்பு விகிதம் 2024ஆம் ஆண்டில் ஏற்றம் பெறவில்லை,” என்றார் திரு கான்.

மேலும், அந்த விகிதம் நிலைபெறுவதற்குப் பதிலாக கீழிறங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய மக்கள்தொகையின் கருத்தரிப்பு விகிதம் 2.1.

2021ஆம் ஆண்டு அந்த விகிதம் 1.12 ஆகவும் 2022ஆம் ஆண்டு 1.04ஆகவும் சரிந்தது.

கடந்த பத்தாண்டுகளில், புதிய குடியேறிகள் இணைந்தபோதிலும் சிங்கப்பூர் குடிமக்கள் எண்ணிக்கையின் வளர்ச்சி விகிதம் குறைந்ததாக திரு கான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்