சிங்கப்பூரின் பயணத்துறை வருவாயில் சாதனை

சிங்கப்பூரின் பயணத்துறை வருவாயில் சாதனை

2 mins read
அனைத்துலக பயணிகளின் வருகை கூடியது
c6095b6a-f757-4282-94a3-22581556a84c
2025ஆம் ஆண்டு 16.9 மில்லியன் சுற்றுப் பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரின் பயணத்துறை வருவாய் கடந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சாதனை அளவாக $23.9 பில்லியனைத் தொட்டது.

இது 2024ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தைக் காட்டிலும் 6.5 விழுக்காடு அதிகம்.

மேலும், ஆண்டு முழுவதுக்குமான சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் வருவாய் இலக்கு எட்டப்பட்டு விட்டது.

2025ஆம் ஆண்டு முழுவதும் $29 பில்லியன் வருவாயை ஈட்டவேண்டும் என்பது அதன் இலக்கு. ஆனால், அதனையும் தாண்டி $30.5 பில்லியன் வருவாய் திரண்டது.

இதற்கிடையே, 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வருகையளித்த அனைத்துலகச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 16.9 மில்லியனை எட்டியது.

இது 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 2.3 விழுக்காடு அதிகம்.

இவ்வாண்டு 17 மில்லியனுக்கும் 18 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் சுற்றுப் பயணிகள் வருவார்கள் என்றும் அதன் மூலம் $31 பில்லியன் முதல் $32.5 பில்லியன் வரையிலான வருவாய் கிட்டும் என்றும் கழகம் கணித்துள்ளது.

சிங்கப்பூருக்கு வந்த அனைத்துலகச் சுற்றுப் பயணிகளில் சீன மக்களே முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 2025ஆம் ஆண்டில் 3.1 மில்லியன் பேர் சீனாவிலிருந்து வந்து சென்றனர்.

அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் இந்தோனீசியா (2.4 மில்லியன்), மலேசியா (1.3 மில்லியன்) இருந்தன.

ஆஸ்திரேலியாவிலிருந்து 1.3 மில்லியன் பேரும் இந்தியாவிலிருந்து 1.2 மில்லியன் பேரும் கடந்த ஆண்டு வந்து சென்றனர்.

சீனாவிலிருந்து வந்த பயணிகள் சிங்கப்பூரில் $3.68 பில்லியன் செலவழித்தனர்.

அதற்கு அடுத்து, இந்தோனீசியப் பயணிகள் $2.09 பில்லியனும் ஆஸ்திரேலியப் பயணிகள் $1.54 பில்லியனும் செலவழித்தனர்.

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் சீனப் பயணிகள் மூன்று விழுக்காடு அதிகமாகச் செலவழித்தனர்.

2040ஆம் ஆண்டுக்குள் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைப் பன்மடங்கு உயர்த்தும் நோக்கில் ‘டூரிஸம் 2040’ என்னும் இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் பயணத்துறைக்குக் கிடைத்த வலுவான வருவாய் வளர்ச்சி, ‘டூரிஸம் 2040’ இலக்கை அடைவதற்கான நிலையான பாதையை ஏற்படுத்தித் தந்திருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெலிசா ஓவ் தெரிவித்துள்ளார்.

2025 பயணத்துறை வருவாய் இறுதி விவரங்கள் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்படும்.

சில நாடுகளிலிருந்து வருகையளித்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்தது. வியட்னாமிலிருந்து 2024ஆம் ஆண்டு 393,000 பயணிகள் சிங்கப்பூர் வந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 344,000க்குச் சரிந்தது.

அதேபோல, பிலிப்பீன்ஸிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கையும் 779,000லிருந்து 726,000க்குக் குறைந்தது.

குறிப்புச் சொற்கள்