தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விவியன்: பெருங்கடல் விவகாரங்களில் சிங்கப்பூர் ஆக்ககரமாகப் பங்காற்றும்

2 mins read
4b4d95e8-d659-4200-9203-68a33382ec19
தடுப்பரண்கள் இல்லாத, தாழ்வான நிலப்பகுதியில் உள்ள சிறிய நாடான சிங்கப்பூர், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அதிகம் உணரக்கூடியது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார். - படம்: விவியன் பாலகிருஷ்ணன் ஃபேஸ்புக்

சிங்கப்பூர் சிறிய தீவாக உள்ள நாடு என்றும் அதன் பிழைப்புடனும் நலனுடனும் கடல்கள், பெருங்கடல்கள் ஆகியவை பின்னிப் பிணைந்துள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தெரிவித்தார்.

“உலக விவகாரங்களிலும் பெருங்கடல்கள் சார்ந்த விவகாரங்களிலும் நாங்கள் எப்போதும் ஆக்ககரமாகப் பங்காற்ற முற்பட்டுள்ளோம்,” என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு மின்னஞ்சல் வழி அளித்த அறிக்கையில் குறிப்பிட்டார். 

பிரான்சிலுள்ள நீஸ் நகரின் லிம்பா துறைமுகத்தில் ஜூன் 9 முதல் ஜூன் 13 வரை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெருங்கடல் மாநாட்டில்  அமைச்சர் விவியன், அதன் இறுதி நாளில் அவ்வாறு தெரிவித்தார்.

“கடல்துறை வர்த்தகம், துறைமுகம், எரிபொருள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆற்றலளிக்கும் கடல்கள், பலருக்கு வாழ்வாதாரத்தையும் தருகின்றன,” என்று டாக்டர் விவியன் கூறினார். 

“மொத்த உள்நாட்டுத் தொகையின் மூன்று மடங்கு அளவு மதிப்பில் வர்த்தகத்தைக் கொண்டுள்ள நாடான சிங்கப்பூருக்கு இவை முக்கியமானவை. எரிபொருளுக்கும் உணவு வளங்களுக்கும் இறக்குமதிகளை நம்பும் நாடான சிங்கப்பூருக்குப் பெருங்கடல் முக்கியம்,” என்றும் அவர் கூறினார்.

அனைத்துலக வர்த்தகப் பொருள்களில் 80 விழுக்காட்டுப் பொருள்கள் கடல்வழி போக்குவரத்து வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.

உணவுக்கும் பொழுதுபோக்குக்கும் மூலாதாரமாகத் திகழ்வதோடு, உலகில் மக்களுக்குத் தேவைப்படும் உயிர்வாயுவில் 50 விழுக்காட்டை பெருங்கடல் வெளியிடுகிறது. 

கரியமில வாயு வெளியீட்டிலிருந்து 25 விழுக்காட்டை தனக்குள் எடுத்துக்கொள்வதுடன் அளவுகடந்த வெப்பத்திலிருந்து 90 விழுக்காட்டைப் பெருங்கடல் தன்வசம் கொள்கிறது.

தடுப்பரண்கள் இல்லாத, தாழ்வான நிலப்பகுதியில் உள்ள சிறிய நாடான சிங்கப்பூர், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அதிகம் உணரக்கூடியது என்று டாக்டர் விவியன் கூறினார். கடல்மட்ட உயர்வு, கடற்கரை சீர்குலைவு, கடல்துறை தூய்மைக்கேடு ஆகியவை அந்தப் பாதிப்புகளில் அடங்கும்.

ஐக்கிய நாட்டு அமைப்புகளின் பெருங்கடல் மாநாடுகளில் சிங்கப்பூர் முனைப்புடன் பங்கேற்பதை அமைச்சர் சுட்டினார். மாநாட்டில் சிங்கப்பூரும் துணைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது. 

மூன்றாவது முறையாக 2025ஆம் ஆண்டு நடைபெறும் இந்த உச்சநிலை மாநாட்டில் 193க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் திரண்டனர்.

‘நீஸ் பெருங்கடல் செயல்திட்டம்’ என்ற செயல் சார்ந்த, பன்னாட்டு அரசாங்கங்கள் ஒப்புக்கொண்ட பிரகடனம் ஒன்றை அந்நாடுகளை ஏற்க செய்வது நோக்கமாகும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்