மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சிங்கப்பூரில் மின்சார மொத்த விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கவுள்ள அடுத்த காலாண்டில், பெரும்பாலான வீடுகள் செலுத்தும் மின்சாரக் கட்டணம் உயரும் சாத்தியம் நிலவுகிறது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய ஆய்வின்படி, மின்சாரத்தின் மொத்த விற்பனைச் செலவை அளவிடும் வாராந்தர ‘யுனிஃபார்ம் சிங்கப்பூர் எனர்ஜி பிரைஸ்’ (யுஎஸ்இபி), மார்ச் 15 முதல் 21 வரையிலான வாரத்தில் ஒரு மெகா-வாட் மணிக்கு (MWh) $157.78ஐ எட்டியது. இது, 2026ல் இதுவரை பதிவான அதிகபட்ச விலையாகும்.
மின்சாரத்திற்கான தேவையும் விநியோகமும் குறைந்த நிலையில், இந்த விலை அதற்கு முந்திய வாரத்தைவிட 7 விழுக்காட்டுக்கும் அதிகம்.
அரை மணி நேரத்திற்கு ஒருமுறை கணக்கிடப்படும் யுஎஸ்இபி விலையின் அடிப்படையில், எரிசக்திச் சந்தை ஆணையத்தால் முறைப்படுத்தப்படும் மின்கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அக்டோபர் 2025 தரவுகளின்படி, சிங்கப்பூரில் உள்ள 63.4 விழுக்காட்டு குடும்பங்கள் இந்தக் காலாண்டு வாரியாக மின்கட்டண முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. அதேசமயம், 36 விழுக்காட்டுக்கும் அதிகமான குடும்பங்கள், மின்சார விற்பனையாளர்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளன. 0.1 விழுக்காட்டுக்கும் குறைவான குடும்பங்களே மொத்த விற்பனை விலையில் மின்சாரத்தை வாங்குகின்றன.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைச் சிங்கப்பூருக்கு வழங்கும் முக்கிய நாடான கத்தாரிலிருந்து எரிவாயு விநியோகம் போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் மின்கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள மின்சார விற்பனை நிறுவனங்கள் ஏற்கெனவே தங்கள் புதிய ஒப்பந்தங்களுக்கான விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளதோடு, தள்ளுபடித் திட்டங்களையும் நீக்கி வருகின்றன.
சிங்கப்பூர் தனது மின்சார உற்பத்தியில் 95 விழுக்காட்டு அளவுக்கு, இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவையே நம்பியுள்ளது. 2025ல் பெறப்பட்ட எரிவாயுவில் 43 விழுக்காடு மலேசியாவிலிருந்தும் இந்தோனீசியாவிலிருந்தும் மீதமுள்ள 57 விழுக்காடு இதர நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது.

