மிரட்டிப் பணம் கேட்கப்படும் மின்னஞ்சல்கள் தொடர்பாக ‘சிங்செர்ட்’ எச்சரிக்கை

1 mins read
59d5cd0f-39da-424d-99d0-91a4481f2ca7
மோசடி மின்னஞ்சல்களைப் பெறுவோர் அவற்றைப் பற்றி www.csa.gov.sg/cyber-aid என்ற ‘சிங்செர்ட்’ இணையத்தளத்தில் புகார் செய்யலாம். - சித்திரிப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதம் பொதுமக்களிடம் மிரட்டிப் பணம் கேட்கப்படும் மின்னஞ்சல்கள் குறித்து 33 புகார்கள் வந்ததாக குடியரசின் முன்னணி இணையப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த மின்னஞ்சல்களில் கிரிப்டோ நாணய வடிவில் பணம் கேட்கப்பட்டது. அதைக் கொடுக்காவிட்டால், தீங்குநிரலால் பாதிக்கப்பட்ட சாதனங்களிலிருந்து பெறப்பட்ட அந்தரங்கக் காணொளிகள் வெளியிடப்படக்கூடும் என்ற மிரட்டலும் விடுக்கப்பட்டது.

சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பிரிவான சிங்கப்பூர் கணினிப் பாதுகாப்பு அவசரகாலச் செயற்குழு (சிங்செர்ட்) ஆகஸ்ட் 28ஆம் தேதி அத்தகைய மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அந்த மின்னஞ்சல்கள் பல்வேறு வடிவங்களில் அனுப்பப்பட்டதைக் கவனித்ததாக ‘சிங்செர்ட்’ கூறியது. அவற்றில் சில ஆங்கில மொழியைத் தவிர, வேறு மொழிகளில் அனுப்பப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

அத்தகைய மின்னஞ்சல்களைப் பெறுவோர் அது அநேகமாக மோசடி மின்னஞ்சல் என்பதை அடையாளம் கண்டு, அந்த மிரட்டலைப் புறக்கணிக்க வேண்டும் என்று ‘சிங்செர்ட்’ கூறியது.

பொதுமக்கள் சிக்கலான கடவுச்சொல், இரட்டை மறைச்சொல் முறையை வைத்திருப்பது போன்ற தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அது ஆலோசனை வழங்கியது.

அத்தகைய மின்னஞ்சல்களைப் பெறுவோர் அவற்றைப் பற்றி www.csa.gov.sg/cyber-aid என்ற ‘சிங்செர்ட்’ இணையத்தளத்தில் புகார் செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்