மீடியாகார்ப் வளாகத்தில் பெண்ணை மானபங்கம் செய்த பாடகருக்கு அபராதம்

2 mins read
a2d0c773-23d0-401e-a99a-8f627863e29b
படம்: - பிக்சாபே

மீடியாகார்ப் தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த தன்னுரிமை பெண் ஊழியர் ஒருவரை மானபங்கம் செய்த 42 வயது பாடகரான சிவபாலன் சிவ பிரசாத் மேனனுக்கு $3,000 அபராதம் திங்கட்கிழமை விதிக்கப்பட்டது.

இக்குற்றத்தைப் புரிந்தபோது அவர் மதுபானம் அருந்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தன்மீது சுமத்தப்பட்ட மானபங்க குற்றச்சாட்டை சிவபாலன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

தண்டனை வழங்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்றொரு மானபங்க குற்றச்சாட்டு உட்பட இரு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைப் பாதுகாக்க அப்பெண்ணின் பெயர், குற்றம் நடந்த இடம், தேதி, நிகழ்ச்சியின் பெயர் போன்றவற்றை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இக்குற்றத்தை சிவபாலன் 2022ஆம் ஆண்டுப் புரிந்தார்.

நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகக் குற்றம் நடப்பதற்கு முதல் நாளன்று காலை 11 மணியளவில் ஸ்டார்ஸ் அவென்யூவில் உள்ள மீடியாகார்ப் வளாகத்திற்குப் பாதிக்கப்பட்டவர் வந்தார்.

அதே நிகழ்ச்சியில் பாடகராகவும் நடனக் கலைஞராகவும் பணியாற்றுவதற்காக சிவபாலனும் அவ்விடத்திற்கு வந்தார்.

அன்று மதியம் 3 மணி முதல் இரவு 11.30 மணி வரை சிவபாலன் 15 கோப்பை விஸ்கி எனும் மதுபானத்தை அருந்தியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கிரேஸ் தியோ தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சி நள்ளிரவு தாண்டி 12.20 மணிக்கு முடிந்தது. பாதிக்கப்பட்டவரும் அவருடைய ஆண் நண்பரும் வளாகத்தின் அடித்தளம் 1ல் மின்தூக்கிக்காகக் காத்திருந்ததாக கூறப்பட்டது.

அப்போது, “மின்தூக்கியிலிருந்து வெளியே வந்த சிவபாலன் பாதிக்கப்பட்டவரைக் கண்டதும் அவருக்கு அருகே சென்று அவருடைய வலது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் சிவபாலனைத் தடுக்க முயன்றார் ஆனால் அவரால் முடியவில்லை. முத்தம் கொடுத்த பிறகு அப்பெண்ணை விட்டு சிவபாலன் விலகினார்,” என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் அன்றைய தினமே காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்