பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கிற்கு ஒட்டுமொத்தமாக $14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிடம் இருமுறை பொய்யுரைத்ததாகக் குறிப்பிடும் வழக்கில் சிங் குற்றவாளி என அரசு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, நீதிபதி லியூக் டான் திங்கட்கிழமை (பிப்ரவி 17) பிற்பகல் 3.30 மணிக்கு இத்தண்டனையை அறிவித்தார்.
நீதிமன்ற அமர்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரான சிங், தாம் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறினார்.
சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவருக்குக் குறைந்தது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலோ அல்லது ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் குறைந்தது $10,000 அபராதம் விதிக்கப்பட்டாலோ அவர் தம் பதவியை இழந்துவிடுவார்.
சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான அவரது தகுதியை நீக்கிவிடாது என்று தேர்தல் துறை கூறியது.
2021 ஆகஸ்ட் 3ல் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் உரைத்த பொய்யை சிங், தாம் கையாண்ட விதம் குறித்து நாடாளுமன்றத்திடம் வேண்டுமென்றே பொய்யுரைத்ததாக மாவட்ட நீதிபதி டான், மக்கள் நிரம்பிய நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தபோது கூறினார்.
பாலியல் வதைக்கு உள்ளானவருடன் காவல் நிலையத்திற்குச் சென்றதாக திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்தார். அதே ஆண்டு அக்டோபர் 4ல் அவர், அதே பொய்யை மீண்டும் கூறினார்.
2021ல் ஆகஸ்ட் 8ஆம் தேதி திருவாட்டி கானைச் சந்தித்தபோதும் அக்டோபர் 3ஆம் தேதியிலும், அவரின் பொய்யைத் தெளிவுப்படுத்த சிங் விரும்பியதில்லை என்றார் நீதிபதி.
அதிகபட்ச அபராதத்தை விதிப்பதன் மூலமாக, சத்தியப் பிரமாணத்தின்பேரில் உண்மையைச் சொல்வதன் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றம் வலுவான செய்தியைத் தெரிவிக்கவேண்டும் என்று அரசுத் தரப்பு கூறியதை ஆமோதிப்பதாக நீதிபதி டான் கூறினார்.
பொய்யான தகவலை சிங் அளித்ததன் நோக்கத்தை, வழக்கில் முக்கியமாகக் கருதப்படும் அம்சங்களில் ஒன்றாகக் கருதுவதாக நீதிபதி தெரிவித்தார்.
“குற்றம் சாட்டப்பட்டவர் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் தமது பொய்யுரையை மீட்கவே இல்லை என்பது தொடர்ந்து உண்மையாகவே உள்ளது,” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் திருவாட்டி கானை சிங் பொய் சொல்லச் சொல்லவில்லை என்றாலும் அந்தப் பொய்யை 2021 அக்டோபர் 4ஆம் தேதியிலும் தொடர்ந்து கூறும்படியான நிர்ப்பந்தத்திற்கு சிங் தள்ளியிருந்ததாக நீதிபதி கூறினார்.
“மேலும், கட்சியின் தலைவராகவும் திருவாட்டி கானுக்கும் தலைவராகவும் உள்ளார் என்பதை மட்டும் நான் கருதவில்லை. வழக்கறிஞராகவும் உள்ள அவர், சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னர் பொய்யுரைப்பதால் விளைவுகள் என்ன என்பதையும் அறிந்தவராவார், அல்லது அறிய வேண்டியவராவார்,” என்றார் நீதிபதி.
தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அறிக்கை விடுத்த சிங், மேல்முறையீட்டைத் தாக்கல் செய்யவும் நீதிமன்றத் தீர்ப்பை நுணுக்கமாக ஆராயவும் தம் வழக்கறிஞர் குழுவிடம் தெரிவித்து இருப்பதாகக் கூறினார்.
‘வேண்டுமென்றே பொய்யுரைத்தார்’
பொய்யை முழுமையாக மூடி மறைக்கும்படி சிங் 2021 ஆகஸ்ட் 8ஆம் தேதி கூறியதாக திருவாட்டி கான் சொன்னதை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி டான் கூறினார்.
தமக்கு நெருக்கமானவர்களுக்கு திருவாட்டி கான் அனுப்பிய குறுஞ்செய்தி, திருவாட்டி கானின் கூற்றுக்கு வலுசேர்ப்பதாக நீதிபதி டான் கூறினார்.
ஆகஸ்ட் 8ல் நடைபெற்ற சந்திப்பின் முடிவில், பொய்யை திருவாட்டி கான் தெளிவுபடுத்த சிங் விரும்பவில்லை என மற்ற ஆதாரங்கள் காட்டுவதாக நீதிபதி டான் சுட்டினார்.
பொய்யைத் தொடர்ந்தால் தம்மை ‘எடைபோடப் போவதில்லை’ என்று சிங் கூறியது, திருவாட்டி கான் மறுபடியும் பொய்யுரைத்த பிறகு அவர் போதிய நடவடிக்கை எடுக்காததுடன் ஒத்துப்போவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
சிங், தமது அரசியல் அந்தஸ்தைக் கட்டிக்காக, நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவினரிடம் பொய்யுரைத்ததாகவும் அதற்காக திருவாட்டி கானையும் நெடுநாள் கட்சித் தொண்டர்களையும் இரையாக்கியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வோங் வூன் குவோங், தண்டனை விதிக்கப்பட்டதற்கு முன்னர் கூறினார். இதனால் திருவாட்டி கான், மேலும் கடுமையான தண்டனைக்கு ஆளாகியிருக்கலாம் என அவர் கூறினார்.
அவருக்குப் பிறகு பேசிய சிங்கின் தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமாபோய், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் $4,000க்குமேல் அபராதம் விதிப்பதற்குத் தேவையில்லை என்றார். திருவாட்டி கானின் பொய்யிலிருந்துதான் இந்த வழக்கு ஆரம்பித்தது என்றார் அவர்.
கட்சி நிறமான இளம் நீல சட்டையை அணிந்து வந்த சிங், தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது அமைதியுடன் காணப்பட்டு குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

