சிங்ஹெல்த் டியூக்-என்யுஎஸ் கல்வி மருத்துவ நிலையம் தசை நோய் ஆராய்ச்சிக்காக $10 மில்லியன் மதிப்பிலான திட்டத்தை வழிநடத்தவுள்ளது.
இந்த நோயின் பாதிப்பு பலருக்கு எளிதில் தெரியாது. இது பெரும்பாலும் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களைப் பாதிக்கும்.
‘சார்கோபேனியா’ என்றழைக்கப்படும் இந்தத் தசை சார்ந்த நோய் 2016ஆம் ஆண்டில்தான் அனைத்துலக அளவில் ஒரு நோயாக அடையாளம் காணப்பட்டது.
சிங்கப்பூரில் மூத்தோர் பலருக்கு இந்த நோய் இருந்தாலும் அவர்களுக்கு வழக்கமாக மூப்பு தொடர்பாக ஏற்படும் அறிகுறிகள்தான் உடலில் தென்படும்.
இதனால் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் வழக்கமான தசை வலி, வீக்கம் என்று நினைத்துக்கொண்டு அதைப் பொருட்படுத்தாமல் போகலாம்.
இந்த நோய்க்கு இன்னும் தீர்வு கண்டறியப்படாவிட்டாலும் மருத்துவர்கள் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வுத் திட்டம் தசை, வலிமை இழப்பு விளைவுகளை அளிக்கும் சார்கோபேனியா நோய் குறிப்பாக, ஆசிய நோயாளிகளிடையே எவ்வாறு கண்டறியப்பட்டு, சிகிச்சையளிக்கப்படுகிறது என்பதில் புதுமைகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்கோபேனியா மீது அதிகக் கவனம் செலுத்தப்படும் சிங்கப்பூரின் முதல் விரிவான ஆராய்ச்சி திட்டமாக இது கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘மேக்னெட்’ எனும் இத்திட்டத்தில் நோயாளிகளின் தசை மாதிரிகள் சோதிக்கப்படும். ஆய்வு மூலம் கிடைக்கும் தகவல்கள் நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த விழையும்.
60 வயதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் மூவரில் ஒருவரை சார்கோபேனியா பாதிக்கிறது. ஒருவரின் அசைவுத்தன்மையைப் பாதிக்கும் தன்மை கொண்ட இந்த நோய் இளம் வயதினரையும் பாதிக்கக்கூடும்.
மேக்னெட் திட்டம் சிங்கப்பூரில் இருக்கும் வெவ்வேறு மருத்துவ நிபுணர்களையும் இணைத்துள்ளது. அவர்கள் திட்டத்துக்கு திறம்பட பங்களித்து வருகின்றனர்.
மேக்னெட் ஆராய்ச்சி திட்டத்தில் ஈடுபடும் மருத்துவ நிபுணர்கள் சார்கோபேனியா ஏற்படுவதற்கான மூல காரணத்தை ஆராய்வார்கள்.
செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீனத் தொழில்நுட்ப அம்சங்கள் அதற்கு வழியமைக்கும்.
சார்கோபேனியாவால் பாதிக்கப்பட்ட 1,000 நோயாளிகளிடம் முதல் கட்ட சோதனை நடத்தப்படும். அதன் மூலம் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறியும் கருவியை உருவாக்கும் முயற்சி முக்கிய அங்கம் வகிக்கும்.
வெவ்வேறு நோயாளிகளின் தசை மாதிரிகளைச் சோதிப்பதன் மூலம் ஆய்வுக் குழுவினர் நோயாளிகளின் வளர்சிதை மாற்ற நிலைகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்றும், நோயாளிகளின் நோயெதிர்ப்பு அணுக்களில் மாற்றங்கள் உள்ளதா என்றும் ஆராய்வார்கள்.
வயது தொடர்பான நோய் எனக் கருதப்படும் சார்கோபேனியா ஒருவர் மூப்படையும் போது அவரின் தசை அடர்த்தியை இழக்க செய்து அசைவுத்தன்மையை குறைத்து விடும்.
இதைக் கண்டறிய வழிகள் பெரிதும் இல்லை. தசை வலி, மெதுவாக நடப்பது போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவரைக் காணச் செல்லும்போது மருத்துவர்கள் அதற்கான சிகிச்சையை அளிக்க முடியாது.
மூப்படைவது இதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தாலும் துடிப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் மற்றொரு காரணம்.
சார்கோபேனியா கண்டறியப்படாமல் இருந்தால் அது நாளடைவில் மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
உடலில் இருக்கும் ஒட்டுமொத்த தசைகளும் அழிக்கப்படுவது, புற்றுநோய், எளிதில் தொற்றுநோய்க்கு ஆளாதல் ஆகியவை அவற்றில் அடங்கும் என செங்காங் பொது மருத்துவமனையில் பெருங்குடல் சிகிச்சை சேவைப் பிரிவு வல்லுநரான மருத்துவ இணைப் பேராசிரியர் ஃபிரெடெரிக் கோ கூறினார்.
பொதுமக்கள் இந்த நோயை அலட்சியப்படுத்தக் கூடாதென்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நோய் மனஉளைச்சலால் மேலும் தீவிரமடையும் என்பதால் தேவையான அளவு உடற்பயிற்சியுடன் சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

