தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனித் தொகுதிகளில் 15.5% எம்.பி.க்கள்

2 mins read
775d1f65-c555-4d5d-b831-691dcde8867b
வரும் பொதுத் தேர்தலில்15 தனித்தொகுதிகள் இருக்கும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

1988ல் குழுத் தொகுதி முறை உருவாக்கப்பட்டபோது சிங்கப்பூரில் 81 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. தனித் தொகுதிகள் (SMC) மட்டும் 42 இருந்தன. காலப்போக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப குழுத்தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்த அதேநேரம் தனித் தொகுதிகள் அவற்றுடன் இணைக்கப்பட்டு வந்துள்ளன.

வரும் பொதுத் தேர்தலில் 15 தனித் தொகுதிகள் இருக்கும். அவற்றில் ஆறு புதியன. புக்கிட் கோம்பாக், ஜாலான் காயு, ஜூரோங் சென்ட்ரல், குவீன்ஸ்டவுன், செம்பவாங் வெஸ்ட், தெம்பனிஸ் சங்காட் ஆகியன அவை.

இதர தொகுதிகளுடன் இணைக்கப்பட்டதால் மறைந்துவிட்ட ஐந்து தனித் தொகுதிகள்: புக்கிட் பாத்தோக், ஹோங் கா நார்த், மெக்பர்சன், பொங்கோல் வெஸ்ட், யூஹுவா.

2020 பொதுத் தேர்தலைக்காட்டிலும் ஹோங்கா நார்த், பொத்தோங் பாசிர் ஆகிய தனித் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு குறிப்பிட்டுள்ளது. தனித்தொகுதிகளில் சில வருங்கால மக்கள்தொகை வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய தொகுதிகள் பெரும்பாலும் குழுத் தொகுதிகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டவை.

சுவா சூ காங் குழுத் தொகுதியில் இருந்து புக்கிட் கோம்பாக் பிரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல தஞ்சோங் பகார் குழுத் தொகுதியில் இருந்து குவீன்ஸ்டவுனும் செம்பவாங் குழுத் தொகுதியில் இருந்து செம்பவாங் வெஸ்ட்டும் அங் மோ கியோ குழுத் தொகுதியில் இருந்து ஜாலான் காயுவும் வெட்டப்பட்டு தனித்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

எஞ்சிய இரண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டவை. யூஹுவா தனித் தொகுதியிலிருந்தும் ஜூரோங் குழுத் தொகுதியிலிருந்தும் ஜூரோங் சென்ட்ரல் உதயமாகியுள்ளது. அதேபோல, தெம்பனிஸ் குழுத் தொகுதி, ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி ஆகியவற்றிலிருந்து தெம்பனிஸ் சங்காட் உருவாக்கப்பட்டு உள்ளது.

தனித்தொகுதிகளில் ஆகப் பெரியது புக்கிட் பாஞ்சாங். அங்கு 33,566 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல, கெபுன்பாரு தனித்தொகுதி ஆகச் சிறியது. அங்குள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 22,223.

தொடர்புடைய செய்திகள்

97 புதிய எம்.பி.க்களில் 15.5 விழுக்காட்டினர் தனித் தொகுதிகளைச் சார்ந்தவர்களாக இருப்பர். 2020 பொதுத் தேர்தலில் அந்த விகிதம் 15.1% ஆக இருந்தது.

வரலாற்றை முன்னோக்கிப் பார்த்தால், ஆன்சன் தனித் தொகுதி 1981 முதல் 1986 வரை பாட்டாளிக் கட்சியிடம் இருந்தது. 1984ல் பொத்தோங் பாசிரும் எதிர்க்கட்சிவசம் சென்றது. 1986 வரை இரு தனித்தொகுதிகள் எதிர்க்கட்சிகளிடம் இருந்தன.

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, 1991 தேர்தலில் ஹவ்காங்கில் பாட்டாளிக் கட்சியும் புக்கிட் கோம்பாக், நீ சூன் சென்ட்ரல், பொத்தோங் பாசிர் ஆகிய தொகுதிகளில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் வென்றதால் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை முதல்முறை 4ஆக அதிகரித்தது. அடுத்த தேர்தலில் இது இரண்டாகக் குறைந்தது.

பின்னர், 2011 முதல் பொத்தோங் பாசிர் மசெகவின் தொகுதியாகிவிட்டதால், தற்போது தனித்தொகுதிகளில் ஹவ்காங் மட்டுமே எதிர்க்கட்சியிடம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்