2027 இறுதிக்குள் ‘சிங்லைஃப் கணக்கு’ சேமிப்பு, காப்புறுதித் திட்டம் நிறுத்தம்

2027 இறுதிக்குள் ‘சிங்லைஃப் கணக்கு’ சேமிப்பு, காப்புறுதித் திட்டம் நிறுத்தம்

கோப்புப்படம்: எஸ்பிஎச் மீடியா

18 Nov 2026 - 5:48 pm

2 mins read

உள்ளூர்க் காப்புறுதி நிறுவனமான சிங்லைஃப், தனது ‘சிங்லைஃப் கணக்கு’ சேமிப்பு, காப்புறுதித் திட்டத்தை நிறுத்தவுள்ளது.

எஞ்சிய அனைத்துக் கணக்குகளும் 2027 டிசம்பர் 16ஆம் தேதிக்குள் மூடப்படும். பொதுவாக, தனிப்பட்ட திட்டங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையைத் தெரிவிப்பதில்லை என நிறுவனம் கூறியது.

வாடிக்கையாளர்களின் மாறிவரும் நிதித் தேவைகளுக்கு ஏற்பத் திட்டங்களை மறுஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக இம்முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் பேச்சாளர் புதன்கிழமை (நவம்பர் 18) தெரிவித்தார்.

‘சிங்லைஃப் கணக்கு’ திட்டம் நிறுத்தப்படுவது குறித்து நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் லோ நவம்பர் 16ஆம் தேதி மின்னஞ்சல், செயலி வழியாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தார். புதிய கணக்கு தொடர்பான விண்ணப்பங்களும் இனி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.

நூறு வெள்ளிக்கும் குறைவான இருப்பு கொண்ட கணக்குகள் 2026 டிசம்பர் 16ஆம் தேதி மூடப்படும். 2026 நவம்பர் 11 நிலவரப்படி, 120 நாள்களுக்கு மேலாக $100க்கும் குறைவாகக் கணக்கில் இருந்தால் 2026 டிசம்பர் 16 முதல் அது மூடப்படும். டிசம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு 120 நாள்களை எட்டினால் அதற்கு அடுத்த மாதத்தில் கணக்கு மூடப்படும்.

நூறு வெள்ளி அல்லது அதற்கு மேற்பட்ட தொகை இருப்பு உள்ள கணக்குகள் 2027 டிசம்பர் 16ஆம் தேதி மூடப்படும். அதுவரை வாடிக்கையாளர்கள் பணம் போடலாம், எடுக்கலாம். ஆண்டுக்கு 1.5 விழுக்காடு அடிப்படை வட்டியையும் காப்புறுதிப் பாதுகாப்பையும் தொடர்ந்து பெறலாம்.

கணக்கு மூடப்பட்டதும் காப்புறுதி முடிவிற்கு வரும். ஆயினும், திட்டம் நடப்பிலிருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களுக்கு காப்புறுதி கோரலாம்.

வரும் டிசம்பர் 16 முதல் ‘பேநவ் யுஇஎன்’ மூலம் மூன்றாம் தரப்பு வணிகர்களுக்குப் பணம் செலுத்த இயலாது. வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

எஞ்சிய தொகை தானாகத் திரும்பக் கிடைக்க சிங்லைஃப் செயலியில் வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. பணத்தைத் திரும்ப வழங்கும் செயல்முறை தோல்வியடைந்தால் வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ளப்படுவர்.

இம்முடிவால் சிங்லைஃப் நிறுவனத்தின் மற்ற காப்புறுதித் திட்டங்கள் பாதிக்கப்படா.

ஜப்பானின் சுமிட்டோமோ லைஃப் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிங்லைஃப் 2019ஆம் ஆண்டில் இத்திட்டத்தைத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்