புகார் ஒன்றை முறைதவறி கையாண்டதன் தொடர்பில் பணிநீக்கம் செய்யப்பட்ட சிங்கப்பூர் போஸ்ட் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி வின்சன்ட் பாங்கிற்குக் கொடுக்கப்பட வேண்டியிருந்த சம்பளத் தொகை, பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
திரு பாங்கிற்கு 616,400 வெள்ளி சம்பளத் தொகை கொடுக்கப்பட்டதாக சிங்போஸ்ட் நிறுவனத்தின் ஆக அண்மை வருடாந்தர அறிக்கை குறிப்பிடுகிறது.
முன்னைய நிதியாண்டில் அவருக்கு 1.2 மில்லியன் வெள்ளித் தொகை கொடுக்கப்பட்டதாக ஜூன் 24ல் வெளிவந்த அந்த வருடாந்தர அறிக்கை குறிப்பிடுகிறது. அறிக்கையின் தகவல்படி, அந்தத் தொகையில் 570,600 வெள்ளி சம்பளம், 10,500 வெள்ளி சேமநிதி பங்களிப்பு, 35,200 சலுகைத் தொகை என வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
திரு பாங்குடன் முன்னாள் குழும தலைமை நிர்வாக அதிகாரி வின்சன்ட் யிக், சிங்போஸ்டின் அனைத்துலக வர்த்தகத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி லீ யூ ஆகியோரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். திரு பாங்கிற்கு அடுத்து பதவி வகிப்பவரின் பெயர் அறிவிக்கப்படவில்லை.
சிங்போஸ்ட் நிறுவனத்தின் உத்திபூர்வ கொள்கை தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் புதிய தலைமை நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அந்தக் கொள்கை மீண்டும் முடிவாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது.