ரகசியத் தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சிங்போஸ்ட் நிறுவனத்தின் மூன்று உயர் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதில், அந்த ரகசியத் தகவலில் வெளிப்பட்ட பிரச்சினைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சிங்போஸ்ட் கூறியுள்ளது.
இணைய வர்த்தகத்தில் தண்டத் தொகையை தவிர்க்கும் நோக்கில் எழுந்த பொய்த்தகவல்களால் சிங்போஸ்டின் அனைத்துலக வர்த்தகப் பிரிவின் மூன்று உயர் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இது ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் ஒப்பந்தம் தொடர்பானது மட்டுமே என்று சிங்போஸ்ட் ஞாயிறன்று (டிசம்பர் 29ஆம் தேதி) விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக டிசம்பர் 22ஆம் தேதி சிங்கப்பூர் பங்கு முதலீட்டாளர்கள் சங்கம் சிங்போஸ்ட் தனது அனைத்து வர்த்தகப் பிரிவுகளும் விதிமுறைப்படி, நடைமுறைப்படி செயல்படுகின்றனவா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படுமா எனக் கேட்டிருந்தது. சங்கம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சிங்போஸ்ட் மேற்கண்டவாறு கூறியது.
ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில் சிங்போஸ்ட் தனது அனைத்துலக வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், விநியோகிக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், பொய்யாக ‘விநியோகிக்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டதை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்துதான் மூன்று உயர் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இது குறித்து மேலும் கூறிய சிங்போஸ்ட் நிறுவனம் விநியோகிக்கப்படாத பொட்டலங்களில் ஊழியர்கள் கையால் ‘விநியோகிக்க முடியவில்லை’ என்று குறியிடும் நடைமுறை, தணிக்கைக் குழுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காதவாறு திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதன் தொடர்புடைய மற்ற குறைபாடுகளும் நீக்கப்பட்டுள்ளன என்று சிங்போஸ்ட் கூறியது.