சிங்போஸ்ட் நிறுவனம், தொலைத்தொடர்புத் துறையில் அனுபவம் வாய்ந்த திரு மார்க் சோங்கை அதன் புதிய குழுமத் தலைமை நிர்வாகியாக நியமனம் செய்துள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி அவர் அந்தப் பொறுப்பை ஏற்பார்.
முக்கியத் தளவாட, மின்வர்த்தக நிறுவனமாக உருமாற்றமடைய முனைந்துள்ள சிங்போஸ்ட், வியாழக்கிழமை (செப்டம்பர் 25) இதனை அறிவித்தது.
62 வயதாகும் திரு சோங், சிங்டெல் நிறுவனத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது சிங்டெல் குழுமத்தின் தலைமை நிறுவன அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
திரு சோங்கின் நியமனத்தை வரவேற்ற சிங்போஸ்ட்டின் இயக்குநர் வாரியத் தலைவர் டியோ சுவீ லியன், பேரளவு செயலாக்கங்களை நிர்வகித்தல், தொழில்நுட்ப உருமாற்றத்தை வழிநடத்துதல், அனைத்துலக வர்த்தகங்களுக்குத் தலைமைதாங்குதல் ஆகிய துறைகளில் திரு சோங்கின் அனுபவம் சிங்போஸ்ட்டின் வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்றார்.
திரு மார்க் சோங்கின் தலைமைத்துவத்தின்கீழ் நிறுவனம் அதன் உருமாற்ற இலக்குகளை நிச்சயம் அடையும் என்று வாரியம் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, சிங்போஸ்ட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்பு தமக்குக் கிடைத்த கௌரவம் என்று குறிப்பிட்ட திரு சோங், திறன்மிக்க சிங்போஸ்ட் குழுவினருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.