தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய இயக்குநர்களை நியமித்துள்ளது சிங்போஸ்ட்

1 mins read
cf72f87c-0bc8-4587-9f35-469a9293582d
சில மாதங்களுக்கு முன்னர் சிங்போஸ்ட்டில் மூத்த அதிகாரிகள் மூவர் பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய நியமனங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) நிறுவனம், திரு சுங் லே சியூ, திரு இங் சின் ஹுவீ இருவரையும் புதிய சுயேச்சை இயக்குநர்களாக நியமித்திருப்பதாக பிப்ரவரி 17ஆம் தேதி அறிவித்துள்ளது.

இருவரும் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இடம்பெறமாட்டார்கள் (Non-executive Directors).

திரு இங், 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் ‘எஸ்ஐஏ இஞ்சினீயரிங்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர்.

திரு சுங், 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையின் தலைமை நிதி அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.

சிங்போஸ்ட் சில மாதங்களுக்கு முன்னர் அதன் மூத்த அதிகாரிகள் மூவரைப் பதவிநீக்கம் செய்த நிலையில் புதிய நியமனங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வின்சென்ட் ஃபாங், தலைமை நிதி அதிகாரி வின்சென்ட் யிக், நிறுவனத்தின் அனைத்துலக வர்த்தகப் பிரிவுத் தலைமை நிர்வாக அதிகாரி லி யு ஆகியோர் அவர்கள்.

அந்த மூவரும் குற்றச்செயலை அம்பலப்படுத்தும் அறிக்கை தொடர்பான நிறுவன விசாரணையைக் கையாள்வதில் அலட்சியமாக நடந்துகொண்டதாக சிங்போஸ்ட் கூறியது.

சென்ற ஆண்டுத் (2024) தொடக்கத்தில் அந்த அறிக்கை தனக்குக் கிடைத்ததாகக் கூறிய சிங்போஸ்ட், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துக்கும் அந்த விவகாரம் தொடர்பான அறிக்கை அனுப்பப்பட்டதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்