வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கடைவீடுகளில் செயல்பட்டு வரும் தனது 10 அலுவலகங்களைச் சிங்போஸ்ட் விற்பனைக்கு விட்டுள்ளது.
விற்பனைக்கு விடப்படும் அந்தக் கடைவீடுகளை குத்தகைக்கு எடுக்கவும் அது திட்டமிட்டுள்ளது.
“சிங்போஸ்ட் தனது தொழில்சாரா சொத்துகளைப் பல்வேறுவிதமாக முதலீடு செய்யும் நோக்கத்தில் இந்த முடிவு எடுத்துள்ளது,” என்று சிங்போஸ்ட்டின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
விற்பனைக்கு விட்டபின்னர் அந்தக் கடைவீடுகளை மீண்டும் குத்தகைக்கு எடுத்துச் சிங்போஸ்ட் அலுவலகத்தைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்போஸ்ட் நிறுவனம் கடந்த மே மாதம் அதன் உத்திகளையும் நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்றும் நடவடிக்கைகளையும் தொடர்வதாகக் கூறியிருந்தது.
சிங்போஸ்ட் மொத்தம் 42 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அதில் 21 அலுவலகங்கள் அதற்குச் சொந்தமானவை.
நிறுவனத்தின் உத்திகளை மாற்றும் நடவடிக்கை காரணமாகச் சிங்போஸ்ட் ஆஸ்திரேலியாவில் தனது FMH தளவாட நிறுவனத்தை 853 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்தது. இந்த விற்பனை கடந்த மார்ச் மாதம் நடந்தது.