புதிய குத்தகைதாரர்களையும் வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வகையில், பாய லேபாரில் உள்ள சிங்போஸ்ட் நிலையத்தைப் புதுப்பிக்க சிங்கப்பூர் போஸ்ட் முடிவு செய்துள்ளது. இதற்காக கட்டடக் கலைஞர் ஒருவரும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளார். நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்தக் கட்டடத்தை விற்க முன்பு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், புதிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சோங் அந்த முடிவை மாற்றி, கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகளில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளார்.
வியாழக்கிழமையன்று (மே 14) நடைபெற்ற வருவாய் குறித்த விளக்கமளிப்புக் கூட்டத்தில், சிங்போஸ்ட் நிலையம் நிலையான வாடகை வருமானத்தை ஈட்டித் தரும் முக்கியச் சொத்தாகத் தொடர்வதாக நிறுவனம் தெரிவித்தது. எதிர்காலத்தில் பாய லேபார் வட்டாரம் வணிக மையமாக மாறும்போது, இந்தக் கட்டடம் நீண்டகால அடிப்படையில் பெரிதும் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அதிக வருவாயை ஈட்டும் நோக்கில் மெக்பர்சன், கேலாங், தங்ளின் உள்ளிட்ட சில அஞ்சலகச் சொத்துகளின் ஒரு பகுதியை மூன்றாம் தரப்பினருக்குக் குத்தகைக்கு விடவும் மேலும் சில இடங்களை நீண்டகால அடிப்படையில் மாற்றுப் பயன்பாட்டிற்கு அல்லது மறுவளர்ச்சிக்கு உட்படுத்தவும் சிங்போஸ்ட் பரிசீலித்து வருகிறது.
இதற்கிடையே, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்காக, ஒரு பங்கிற்கு 0.41 காசு சிறப்பு லாப ஈவுத்தொகையையும் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
சிங்போஸ்ட்டின் வருவாய் இந்த நிதியாண்டில் 23.1 விழுக்காடு சரிந்து $376.1 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. மந்தமான உலகப் பொருளியல் சூழலால் அனைத்துலக வர்த்தகம் வெகுவாகக் குறைந்ததும், அஞ்சல் கடிதங்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
அனைத்துலக ஏற்றுமதி குறைந்ததன் தாக்கத்தால், நிறுவனத்தின் முழு ஆண்டுச் செயல்பாட்டு லாபமும் 68.9 விழுக்காடு வீழ்ச்சி கண்டு $11.8 மில்லியனாகப் பதிவானது. இந்த நிதிநிலை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, சிங்போஸ்ட் நிறுவனப் பங்குகளின் மதிப்பு வியாழக்கிழமை (மே 14) காலை 10.44 மணி நிலவரப்படி 5.3 விழுக்காடு சரிந்து 35.5 காசுகளாகக் குறைந்தது.

