எஸ்எம்ஆர்டி ரயில்கள் வழியாக அஞ்சல் பெற்றுச்செல்லும் முறை தொடர்பான முன்னோட்டத் திட்டத்தை சிங்போஸ்ட் நிறுவனமும் எஸ்எம்ஆர்டியின் வர்த்தகப் பிரிவான ஸ்டெல்லர் லைஃப்ஸ்டைலும் இணைந்து நடத்த இருக்கின்றன.
இதன்மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை ஆராய இந்த அறிமுகத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவை கூறின.
இத்திட்டம் மூலம் செலவினமும் கரிம வெளியேற்றமும் குறைகிறதா என்பதைக் கண்டறிய முன்னோட்டத் திட்டம் நடத்தப்படுகிறது.
எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகில் கூடுதல் அஞ்சல் சேகரிப்புச் சேவை இடங்களை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
ஜூன் மாதம் 25ஆம் தேதி தொடங்கி மூன்று மாதங்களுக்கு, சிங்போஸ்ட் சீருடை அணிந்த இரு ‘அஞ்சல் தூதர்கள்’ தெம்பனிஸ், ராஃபிள்ஸ் எம்ஆர்டி நிலையங்களிலிருந்து நாள்தோறும் அஞ்சல் பொருள்களைப் பெற்றுச் செல்வர்.
காலை 11 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும் இடைப்பட்ட உச்சவேளையற்ற நேரங்களில் கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ‘அஞ்சல் தூதர்கள்’ அஞ்சல் பொருள்களுடன் பயணம் செய்வர்.
பாய லேபார் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள சிங்போஸ்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான அஞ்சல்களை வகைப்படுத்தும் நிலையத்துக்கு அவற்றை அவர்கள் கொண்டு செல்வர்.
அஞ்சல் பொருள்களைப் பெற்றுச் செல்ல எம்ஆர்டி ரயில்களைப் பயன்படுத்தும் முறை இதுவே முதல்முறை.
தொடர்புடைய செய்திகள்
இந்த முன்னோட்டத் திட்டம் வெற்றிகரமானதாக அமைந்தால் அதை எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மற்ற எம்ஆர்டி நிலையங்களுக்கும் விரிவுபடுத்த சிங்போஸ்ட் நிறுவனமும் ஸ்டெல்லர் லைஃப்ஸ்டைலும் திட்டமிட்டுள்ளன.
அஞ்சல் சேகரிக்கும் இடங்கள் வேறு எங்கெங்கு வைக்கப்படலாம் என்பதை சிங்போஸ்ட் நிறுவனம் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

