சிங்போஸ்ட் பெயரில் வாட்ஸ்அப் மோசடி: காவல்துறை எச்சரிக்கை

சிங்போஸ்ட் பெயரில் வாட்ஸ்அப் மோசடி: காவல்துறை எச்சரிக்கை

1 mins read
00dccbac-dfc4-4173-831e-8da66cd12774
சிங்போஸ்ட் பெயரில் போலி செய்திகள் அனுப்பப்படுவதன் தொடர்பில், மார்ச் 15ஆம் தேதி முதல் இதுவரை குறைந்தது பத்து மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

சிங்போஸ்ட் பெயரில் வரும் போலி வாட்ஸ்அப் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களைக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தகவல் முழுமையாக இல்லாத காரணத்தால் உங்கள் பொட்டலத்தை விநியோகம் செய்ய முடியவில்லை என சிங்போஸ்ட் அனுப்புவது போல போலிச் செய்தியை மோசடிக்காரர்கள் அனுப்புவதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தெரிவித்தது.

மேலும், மார்ச் 15ஆம் தேதி முதல் இதுவரை குறைந்தது பத்து மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் குறைந்தது $22,000 பணத்தைப் பொதுமக்கள் இழந்துள்ளதாகவும் அது கூறியது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வந்த வாட்ஸ்அப் செய்தியில், “நீங்கள் வழங்கிய முகவரி தவறானது அல்லது முழுமையற்றது என்பதால், உங்களது பொட்டலத்தை விநியோகிக்க முடியவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், முகவரியைப் புதுப்பிக்க ஒரு இணையத்தளம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதை அழுத்தினால், அது சிங்போஸ்ட் தளம் போலவே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளத்திற்கு அழைத்துச் செல்லும்.

வங்கி விவரங்கள், கடன்/ பற்று அட்டை எண்கள் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் ரகசியக் குறியீடு ஆகியவற்றைப் பதிவிடுமாறு கேட்கப்படும்.

இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி,மோசடிப் பேர்வழிகள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து வெளிநாட்டு நாணயங்களில் அங்கீகரிக்கப்படாத பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வர்.

சிங்போஸ்ட் பெயரில் வரும் போலி ‘வாட்ஸ்அப்’ அல்லது குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணையத்தள இணைப்பைத் தட்ட வேண்டாம் எனப் பொதுமக்களைக் காவல்துறை எச்சரித்துள்ளது.

மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுக்க ‘ஸ்கேம்ஷீல்ட்’ செயலியைப் பயன்படுத்துமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்