தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்போஸ்ட் மூத்த நிர்வாகிகள் மூவரின் பணிநீக்கம் ‘முன்னெப்போதும் இல்லாதது’: நிபுணர்கள்

2 mins read
ae79e30a-f991-4c13-9083-e7c31419b6d8
சிங்கப்பூரில் அஞ்சல் சேவைச் செயல்பாடுகளுக்குப் பாதிப்பு இல்லை என்பதை சிங்போஸ்ட் இயக்குநர் சபை உறுதியளித்துள்ளது - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) நிறுவனம், அதன் குழுமத் தலைமை நிர்வாகி, குழுமத் தலைமை நிதி அதிகாரி உட்பட மூன்று மூத்த நிர்வாகிகளைப் பணிநீக்கம் செய்திருப்பது, சிங்கப்பூர் பங்குச்சந்தையில் இடம்பெற்ற நிறுவனம் ஒன்றுக்கு இதுவரை நடக்காத நிகழ்வு எனப் பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நிறுவன ஆளுமையின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுவதாக அவர் கருத்துரைத்தனர்.

எனினும் பணிநீக்கத்துக்கு வித்திட்ட, தவறுகளைச் சுட்டிக்காட்டும் அறிக்கையை சிங்போஸ்ட் கையாண்ட விதம், பங்குதாரர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. எடுத்துக்காட்டாக, சிங்போஸ்ட் இயக்குநர் சபைக்கு அந்த அறிக்கை எப்போது கிடைத்தது, விசாரணை நடந்தபோது என்னென்ன பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் இருந்தன என்பது பற்றிய விவரங்கள் வழங்கப்படவில்லை.

மூத்த நிர்வாகிகளின் பணிநீக்கம் பற்றி இதுவரை வெளியிடப்பட்ட விவரங்கள், இந்தத் தருணத்தில் பங்குதாரர்களுக்குப் போதுமானதாக இல்லை என பங்கு முதலீட்டாளர் சங்க (சிங்கப்பூர்) தலைவரும் அதன் தலைமை நிர்வாகியுமான டேவிட் ஜெரால்ட் கூறினார்.

2024 நிதியாண்டுக்கான சிங்போஸ்ட்டின் ஆக அண்மைய ஆண்டு அறிக்கையும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் அறிக்கையைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

இந்த விவகாரம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 24) பதிலளித்த தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம், மின் வணிக விநியோகத் தரவு பொய்யுரைப்பு வழக்கை தன்னிடமும் சிங்போஸ்ட்டிடமும் பிப்ரவரியில் ஒருதரப்பு சுட்டிக்காட்டியதாகச் சொன்னது. சிங்போஸ்ட் இந்த உண்மையை வெளிப்படுத்துவதற்கு 10 மாதங்களுக்கு முன்பு அது தெரியவந்தது.

இந்நிலையில், முறையான ஆளுமை, செயல்முறைகளை நிலைநிறுத்த சிங்போஸ்ட்டுக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஆணையம் கூறியது.

“ஒழுங்குபடுத்தப்பட்ட அஞ்சல் சேவைகளுக்குப் பாதிப்பு இல்லை. ஏனெனில் இந்த விவகாரம், அனைத்துலக மின் வணிகப் பொட்டலங்களை வெளிநாடுகளுக்கு விநியோகிப்பது சம்பந்தப்பட்டது. நிலவரத்தை ஆணையம் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. சிங்கப்பூரில் அஞ்சல் சேவைச் செயல்பாடுகளுக்குப் பாதிப்பு இல்லை என்பதை சிங்போஸ்ட் இயக்குநர் சபை உறுதியளித்துள்ளது,” என்றது ஆணையம்.

குறிப்புச் சொற்கள்