தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்போஸ்ட்டின் புதிய அஞ்சல் சேவை: அமெரிக்கப் புது வரிகளின் எதிரொலி

2 mins read
a295f89d-9919-44ed-8e73-29d4f9f81921
பயனீட்டாளர்கள் அமெரிக்காவுக்குப் பொருள்களை அனுப்ப இரண்டு விதமான தெரிவுகளை வழங்குகிறது சிங்போஸ்ட். செலுத்தவேண்டிய தீர்வைகள், வரிகளின் விவரங்களையும் நிறுவனம் அவர்களுக்குத் தெரியப்படுத்தும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

அமெரிக்காவுக்குப் பொட்டலங்கள் மூலம் பொருள்களை அனுப்ப விரும்புவோருக்காகப் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது சிங்கப்பூர் போஸ்ட். கப்பல் மூலம் அனுப்பப்படும் அந்தச் சேவைக்கு எடையைப் பொறுத்து கட்டணம் அமையும்.

கப்பலில் அனுப்புவதற்கு முன்பு, தீர்வைகளையும் வரிகளையும் பயனீட்டாளர்கள் செலுத்தவேண்டும்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி அமெரிக்கா வரிகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன் எதிரொலியாகப் புதிய சேவை திங்கட்கிழமை (செப்டம்பர் 15) நடப்புக்கு வருகிறது.

இதற்கு முன்னர் 800 அமெரிக்க டாலருக்குள் ($1,025) இருக்கும் பொருள்களை அமெரிக்காவுக்கு அனுப்ப வரியோ தீர்வையோ செலுத்தவேண்டியதில்லை.

சிங்போஸ்ட், அமெரிக்காவுக்குச் சரக்குப் பொருள்களை அனுப்புவதற்குரிய அதன் வழக்கமான அஞ்சல் சேவையை ஆகஸ்ட் 25ஆம் தேதி தற்காலிகமாய் நிறுத்தியது. பொட்டலங்கள் கைப்பற்றப்படுவது அல்லது தாமதமாக அனுப்பப்படுவதிலிருந்து பயனீட்டாளர்களைப் பாதுகாக்க அவ்வாறு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாரம்பரிய அஞ்சல் கட்டமைப்பு, மாற்றங்களை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை என்று சிங்போஸ்ட் குறிப்பிட்டது.

மாற்றங்களின்படி அனைத்துச் சரக்குப் பொருள்களும் தீர்வைகள், வரிகள், கூடுதல் சோதனை முதலானவற்றுக்கு உட்படுத்தப்படும்.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நேரடி அனைத்துலக விரைவு அஞ்சல் சேவை, நம்பகமான மாற்று ஏற்பாடு என்று சிங்போஸ்ட் சொன்னது.

அரை கிலோகிராம் வரையிலான பொட்டலங்களை உறையில் வைத்து அனுப்ப $29 கட்டணம் செலுத்தவேண்டும். இரண்டு கிலோகிராம் வரையிலான பொருள்களை அட்டைப் பெட்டியில் அனுப்புவதற்குரிய கட்டணம் $69.

இருப்பினும் பொருள்களின் மதிப்பு 100 அமெரிக்க டாலருக்குள் இருக்கவேண்டும். பொருள்கள் சென்றுசேர ஐந்து முதல் எட்டு வேலை நாள்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணத்தில் தீர்வைகளும் சுங்க வரிகளும் சேர்க்கப்பட்டிருக்கமாட்டா. பொருள்களை அனுப்புவதற்கு முன்பு பயனீட்டாளர்களிடம் அவற்றின் விவரத்தைப் பயனீட்டாளர்களிடம் சிங்போஸ்ட் கூறிவிடும்.

குறிப்புச் சொற்கள்