கடிதப் போக்குவரத்து குறைந்ததால் சிங்போஸ்ட் லாபம் படுவீழ்ச்சி

கடிதப் போக்குவரத்து குறைந்ததால் சிங்போஸ்ட் லாபம் படுவீழ்ச்சி

2 mins read
215b0bbf-cff6-4a3d-8ac0-f84af71e57e7
டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் 38.3 விழுக்காட்டு லாபச் சரிவை சிங்போஸ்ட் சந்தித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் போஸ்ட் நிறுவனத்தின் லாபம் $6.2 மில்லியனில் இருந்து $3.8 மில்லியனுக்குக் குறைந்துவிட்டது.

இது 38.3 விழுக்காடு சரிவு என்று சிங்போஸ்ட் புதன்கிழமை (பிப்ரவரி 25) தெரிவித்தது.

டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த அந்த நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு அறிக்கையில் ஓராண்டு நிலவரம் ஒப்பிடப்பட்டு உள்ளது.

கடிதங்களும் எல்லைதாண்டி இணைய வர்த்தக விநியோகங்களும் படுவீழ்ச்சி கண்டது அந்நிறுவனத்தின் லாபத்தைப் பாதித்துள்ளது.

ஆண்டு அடிப்படையில் அதன் வருமானமும் 26.8 விழுக்காடு சரிவு கண்டுள்ளது. ஓராண்டுக்கு முன்னர் மூன்றாம் காலாண்டில் $126.2 மில்லியனாக இருந்த சிங்போஸ்ட் வருமானம் 2025 மூன்றாம் காலாண்டில் $92.3 மில்லியனுக்குச் சரிந்தது.

லாபம் குறைந்ததுபோல அதன் நடைமுறைச் செலவுகளும் குறைந்துள்ளன. ஓராண்டுக்கு முன்னர் $120 மில்லியனாக இருந்த செலவுகள் $88.5 மில்லியனாகக் குறைந்தது. இது 26.2 விழுக்காடு சரிவு.

வெளிநாடுகளுக்கான கடிதம், பொருள் விநியோகங்களுக்குச் செலவிடப்படும் தொகை குறைந்தது மொத்தச் செலவுகளில் பிரதிபலித்தது. ஊழியர் தொடர்பான செலவுகளும் குறைந்துள்ளன.

வர்த்தக விநியோகத்தைப் பொறுத்தவரை, உள்நாட்டில் விழாக்காலங்களில் இணைய வர்த்தக விநியோகங்கள் சிறப்பாக இருந்தன. ஆண்டு அடிப்படையில் அதன் மாதாந்தர விநியோகம் 11.6 விழுக்காடு அதிகரித்தது.

அதேநேரம், வெளிநாடுகளுக்கான இணைய வர்த்தக விநியோகங்கள் 58.9 விழுக்காடு சரிவைச் சந்தித்தன. சந்தை நிலவரம் கடினமாக இருந்ததே அதற்குக் காரணம்.

மக்களுக்கு இடையிலான கடிதப் போக்குவரத்து தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. உள்ளூர்க் கடிதப் போக்குவரத்து ஓராண்டுக்கு முந்திய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 23.4 விழுக்காடு குறைந்துவிட்டது.

சிங்போஸ்ட், தனது அடிப்படை வர்த்தகத்தை வலுப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இவ்வாண்டு ஜனவரியில் கடித விநியோகக் கட்டணத்தில் 10 காசை அது அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்