தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டில் கைப்பேசிக்கு வந்த அழைப்புகளை ஏற்றுப் பேசாததற்குக் கட்டணம்; கட்டண விதிப்பு சரி என்கிறது சிங்டெல்

2 mins read
fa9bbb0c-32a4-44a9-a015-902499e38176
சிங்டெல் பணியாளர்களுடன் வாடிக்கையாளர் தொடர்புகொண்டு பேசியபோது வெவ்வேறு பதில் அளித்திருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டில் இருந்த சமயத்தில் சிங்டெல் வாடிக்கையாளர் ஒருவருக்கு சிங்கப்பூரிலிருந்து அழைப்புகள் வந்தன.

இருப்பினும், அழைத்தவர்களிடம் அந்த வாடிக்கையாளர் பேசவில்லை.

ஆனால், அந்த அழைப்புகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டதுடன் அது தொடர்பாக சிங்டெல் பணியாளர்களுடன் வாடிக்கையாளர் தொடர்புகொண்டு பேசியபோது இருவரும் வெவ்வேறு பதிலும் அளித்திருந்தனர்.

பேங்காக், கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு வாடிக்கையாளர் அண்மையில் பயணம் மேற்கொண்டபோது சிங்கப்பூரிலிருந்து அழைப்புகள் வந்ததாகத் தெரிவித்தார்.

அந்த அழைப்புகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிந்ததும் ‘சிங்டெல் வாட்ஸ்அப்’ ஆதரவுச் சேவை மேலாளருடன் தொடர்புகொண்டு வாடிக்கையாளர் தமது நிலை குறித்து வினவினார்.

“வெளிநாட்டில் இருக்கும்போது இவ்வாறு அழைப்புகள் வந்து பேசாவிட்டாலும் கட்டணம் விதிக்கப்படும்,” என்று அந்தத் தொடர்புவழி பேசிய மேலாளர் கூறியுள்ளார்.

சிங்டெல்லின் சிங்கப்பூர் வாடிக்கையாளர் சேவை மேலாளரிடம் அதே கட்டணம் குறித்து கேட்டபோது, அழைப்புகளை ஏற்காவிட்டால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்பட்டது.

விசாரித்ததில் வாடிக்கையாளர் அந்த அழைப்புகளை ஏற்றுப் பேசியதாக சிங்டெல்லின் தாய்லாந்து, மலேசியத் தொலைபேசி நிறுவனப் பங்காளிகள் தெரிவித்ததாகவும் அந்த மேலாளர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஏதேனும் தரவுகள் ஆதாரமாக உள்ளனவா என்று வாடிக்கையாளர் கேட்கவே, அதை நிறுவனத்தால் காட்ட முடியவில்லை என்றார் அந்த வாடிக்கையாளர்.

மலேசியாவுக்கும் தாய்லாந்துக்கும் பயணம் மேற்கொண்ட அந்த வாடிக்கையாளர், வெளிநாட்டு அழைப்புகளை ஏற்றுப் பேசக்கூடிய வசதியை சிங்டெல் வழங்கியிருந்தது. அவருக்கு அழைப்புகள் வந்ததுடன் அவர் குறுந்தகவல்கள் அனுப்பியும் இருந்ததாக சிங்டெல் பேச்சாளர், ‘ஸ்டோம்ப்’ தளத்திடம் தெரிவித்தார்.

இதனால், கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“அவர் இந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்தக் கேட்டுக்கொண்டதன்படி, நாங்கள் எங்களின் மலேசிய, தாய்லாந்து வெளிநாட்டு அழைப்பு பங்காளிகளுடன் தீவிர விசாரணை மேற்கொண்டோம். கட்டமைப்பின் பதிவுகளின் மூலம் இந்தப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன என்பதை நாங்கள் உறுதிசெய்தோம். இதனால் ஏற்பட்ட கூடுதல் கட்டணம் முறையாகத்தான் விதிக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

வாடிக்கையாளருடன் தாங்கள் தொடர்ந்து இதுகுறித்துப் பேசிவருவதாகக் குறிப்பிட்ட பேச்சாளர், தவறான தகவல் அளித்தமைக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.

ஒருசில நாடுகளில் அழைப்புகளை ஏற்றுப் பேசாவிட்டாலும் கட்டணம் விதிக்கப்படுவது குறித்து நிறுவனத்தின் முகவர் பொதுவான ஆலோசனை வழங்கியதாக ஸ்டோம்ப் தளம் அறிந்து வந்தது. ஆனால், அத்தகைய நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் செல்லாததால் இந்த நிபந்தனை அவருக்குப் பொருந்தாது.

இதற்கிடையே, தவறான தகவல் அளித்த பணியாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் நல்லெண்ணம் காரணமாக, வாடிக்கையாளருக்கு விதிக்கப்பட்ட கட்டணத்துக்கு நிறுவனம் விலக்கு அளித்ததாகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பணியாளர் புதிதாக வேலையில் அமர்த்தப்பட்டவர் என்றும் வெளிநாட்டில் இருக்கும்போது வரும் அழைப்புகளை ஏற்பது தொடர்பான நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் அவர் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டதாகவும் ஸ்டோம்ப் அறிந்துவந்தது.

குறிப்புச் சொற்கள்