ஆப்டஸ் பங்கு விற்பனை: பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியது சிங்டெல்

ஆப்டஸ் பங்கு விற்பனை: பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியது சிங்டெல்

1 mins read
2d0bf6ba-9189-4c53-b798-4685403e5532
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ‘ஆப்டஸ்’. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனது ஆஸ்திரேலியத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டசின் பங்கை விற்பனை செய்வது குறித்துப் பலதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதை சிங்டெல் நிறுவனம் வியாழக்கிழமை (ஜூலை 30) உறுதிப்படுத்தியது.

இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தத்தில் முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அது கூறியது.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்புச் சேவை நிறுவனமான ஆப்டஸ், 2001ஆம் ஆண்டுமுதல் சிங்டெல் நிறுவனத்தின் வசமே இருந்து வருகிறது.

எந்தெந்தத் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்பதை அந்நிறுவனம் குறிப்பிடவில்லை.

ஆப்டஸ் நிறுவனத்திற்குச் சிறுபான்மைப் பங்காளியை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாக சிங்டெல் மே மாதம் தெரிவித்திருந்தது. 2024 மார்ச் மாதத்தில், ஆப்டசின் கணிசமான பங்கை ‘புரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் சிங்டெல் ஈடுபட்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இருப்பினும், தொலைத்தொடர்பு நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான எந்தவோர் உடனடி ஒப்பந்தமும் இல்லை என்று சிங்டெல் நிறுவனம் அப்போது கூறியிருந்தது.

ஆஸ்திரேலியாவின் அவசரகால அழைப்புச் சேவையில் ஏற்பட்ட இரண்டு சேவை தடங்கல்களால் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், அது நான்கு பேரின் உயிரிழப்போடும் தொடர்புபடுத்தப்பட்டதை அடுத்து, அந்தத் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனம் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது.

அந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி உட்பட இரண்டு மூத்த நிர்வாகிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்