தரவு நிலைய நிறுவனத்தை வாங்கும் சிங்டெல், கேகேஆர்

தரவு நிலைய நிறுவனத்தை வாங்கும் சிங்டெல், கேகேஆர்

2 mins read
875e1953-830f-4de7-ae73-4ea27840e219
சிங்டெல் மற்றும் கேகேஆர் இணைந்து எஸ்டிடி ஜிடிசியின் 82 விழுக்காடு பங்குகளை வாங்குகின்றன. - படம்: எஸ்டி டெலிமீடியா

சிங்டெல் மற்றும் உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கேகேஆர் (KKR) ஆகியவை இணைந்து மாபெரும் தரவு மைய நிறுவனமான எஸ்டிடி ஜிடிசியை (STT GDC) வாங்கவுள்ளன.

தெமாசெக்கின் கீழ் செயல்படும் எஸ்டி டெலிமீடியா குளோபல் டேட்டா செண்டர்ஸ் (எஸ்டிடி ஜிடிசி) ஆசியாவின் ஆகப் பெரிய தரவு மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

சிங்டெல் மற்றும் கேகேஆர் இணைந்து எஸ்டிடி ஜிடிசியின் 82 விழுக்காடு பங்குகளை வாங்குகின்றன. அதன் மதிப்பு 6.6 பில்லியன் வெள்ளி. அந்தத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ்டிடி ஜிடிசியில் ஏற்கெனவே சிங்டெல் மற்றும் கேகேஆர் நிறுவனங்கள் 14 விழுக்காடு பங்குகளை வைத்துள்ளன.

மற்ற 4 விழுக்காடு பங்குகளை எஸ்டிடி ஜிடிசி நிறுவனமே வைத்துக்கொண்டது.

இந்த விற்பனையின் மூலம் எஸ்டிடி ஜிடிசி நிறுவனத்தின் மொத்த மதிப்பு 13.8 பில்லியன் வெள்ளிக்கு உயர்ந்துள்ளது.

நிறுவனத்தை வாங்குவது குறித்து சிங்டெல் நிறுவனம் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் புதன்கிழமை (பிப்ரவரி 4) தெரிவித்தது.

சிங்டெல் கிட்டத்தட்ட 740 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யும். அதாவது 25 விழுக்காடு பங்கை சிங்டெல் வைத்திருக்கும். மற்றதை கேகேஆர் வைத்திருக்கும்.

பிப்ரவரி 4ஆம் தேதி பிற்பகல் வர்த்தகத்தின்போது ஒரு சிங்டெல் பங்கின் விலை 0.8 விழுக்காடு குறைந்து $4.82 ஆக இருந்தது.

காலையில் அது 1.85 விழுக்காடாக உயர்ந்து $4.95 ஆக இருந்தது.

கடந்த இரண்டு நாள்களாக விற்பனை ஒப்பந்தம் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானதால் சிங்டெல் பங்கு 5.9 விழுக்காடு உயர்ந்தது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதனால் தரவு நிலையங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

தரவு நிலையங்களில் சக்தி வாய்ந்த பெரிய கணினிகள், சேமிப்பு, மேம்பட்ட குளிரூட்டும் உள்கட்டமைப்பு ஆகியவை இருக்கும்.

குறிப்புச் சொற்கள்