இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்டெல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் 71.6% சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் அந்நிறுவனம் 2.88 பில்லியன் வெள்ளி லாபத்தை ஈட்டியது. இவ்வாண்டு அத்தொகை 818 மில்லியனுக்குச் சரிந்ததாக சிங்டெல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது.
சென்ற ஆண்டு முதல் காலாண்டில் ஏர்டெல் சேவையில் தங்களுக்கிருந்த பங்கின் ஒரு பகுதி விற்கப்பட்டதும் இன்டச்-கல்ஃப் எனர்ஜி நிறுவனங்களின் இணைப்பும் அந்தக் காலகட்டத்தில் அதிக லாபம் பதிவானதற்குக் காரணங்கள் என்று சிங்டெல் குறிப்பிட்டது.
வட்டி விகிதம், வரிகள் ஆகிய அம்சங்கள் கருத்தில்கொள்ளப்படுவதற்கு முன்பு சிங்டெல் குழுமத்தின் செயல்பாட்டு வருவாயும் (operating revenue) வருமானமும் கூடின.
சிங்டெல் சிங்கப்பூரின் செயல்பாட்டு வருவாய் 3.1 விழுக்காடு குறைந்து 901 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது. முந்தைய ஆண்டில் அது 929 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது. விலை தொடர்பில் தொடர்ந்து தீவிரப் போட்டி இருந்துவருவதே இதற்குக் காரணம் என்று சிங்டெல் கூறியது.
சிங்டெல்லின் கைப்பேசிச் சேவை வருவாய் நான்கு விழுக்காடு குறைந்தது. சராசரியாகப் பயனர்களிடமிருந்து ஈட்டப்படும் வருவாய் குறைந்தது அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.


