தாய்லாந்து எரிசக்தி நிறுவனப் பங்குகளை விற்பனை செய்த சிங்டெல்

தாய்லாந்து எரிசக்தி நிறுவனப் பங்குகளை விற்பனை செய்த சிங்டெல்

1 mins read
விற்பனையின் வழி $1 பில்லியன் ஈட்டிய சிங்டெல்
a6d39814-ea81-48c3-a2c5-baf9c5d3d3de
பங்குகளின் விற்பனை, மின்னிலக்க உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கு உதவும் என்று சிங்டெல் நிறுவனம் தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

‘கல்ஃப் டெவலப்மண்ட்’ எனப்படும் தாய்லாந்தின் ஆகப் பெரிய எரிசக்தி நிறுவனத்தில் வைத்திருந்த பங்குகளில் 2.8 விழுக்காட்டை சிங்டெல் விற்றுவிட்டது.

அந்த விற்பனையின்மூலம் சிங்டெல் கிட்டத்தட்ட $1 பில்லியன் ஈட்டியது. முதலீடுகளின் வழியாகக் கிடைத்த பணத்தைத் தனது பங்குதாரர்களுக்கு அதிக ஆதாயமாக வழங்க அந்நிறுவனம் திட்டமிடுகிறது.

அந்தப் பங்கு விற்பனை, நிறுவன நிலையிலான முதலீட்டாளர்களுக்குத் தனிப்பட்ட ஒதுக்கீடுகள்மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, $140 மில்லியன் தொகை மொத்த லாபம் கிடைக்கும் என்று சிங்டெல் நிறுவனம் திங்கட்கிழமை (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அந்தப் பரிவர்த்தனைக்குப் பிறகு, தாய்லாந்து நிறுவனத்தில் தொடர்ந்து 4.95 விழுக்காடு பங்கை அது தக்கவைத்துக்கொள்ளும். அந்தப் பங்குகளின் மதிப்பு $1.8 பில்லியன் என்று சிங்டெல் குறிப்பிட்டது.

தாய்லாந்தின் பங்குச் சந்தைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் தனிப்பட்ட முறையில் செய்யப்பட்ட ஆகப் பெரிய முதலீடு சார்ந்த பரிவர்த்தனையாக இது கருதப்படுவதாக புளூம்பெர்க் ஊடகம் கூறியது.

இடைக்கால இலக்கு

2024ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும் முதலீட்டு மறுசுழற்சித் திட்டப்படி, சிங்டெல் இந்த விற்பனையுடன் மொத்த வருவாய் $6.8 பில்லியனை எட்டியுள்ளது. அதன்படி, தனது இடைக்கால இலக்கான $9 பில்லியனை அந்நிறுவனம் நெருங்கிவருகிறது.

விற்பனையில் கிடைத்த நிதி, ஈவுத்தொகைக்கு ஆதரவு தரவும், பங்குகளை மீட்டுக்கொள்ளவும், மின்னிலக்க உள்கட்டமைப்பின் மேம்பாட்டுக்கும் உதவும் என்று சிங்டெல் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஆர்தர் லாங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்