மத்திய வைப்புத் தொகையக் கணக்கிற்கு மாறும் சிங்டெல் சிறப்புத் தள்ளுபடிப் பங்குகள்

மத்திய வைப்புத் தொகையக் கணக்கிற்கு மாறும் சிங்டெல் சிறப்புத் தள்ளுபடிப் பங்குகள்

2 mins read
பங்குகளை வைத்திருப்போர் விற்றுப் பணமாக்கிக்கொள்ள வாய்ப்பு
a080ba0d-f537-43a2-9ac7-37bc8a54028f
இம்மாற்ற நடவடிக்கையினால், ‘எஸ்டிஎஸ்’ பங்குதாரர்கள் நவம்பர் மாதம் 19 முதல் 20 ஆம் தேதிவரை அப்பங்குகளை விற்க முடியாது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்டெல் குழுமத்தின் சிறப்புத் தள்ளுபடிப் பங்குகளை (Singtel Special Discounted shares) வைத்திருப்போர், அவற்றை நேரடியாக நிர்வகிக்கும் வகையில் அவற்றை மத்திய சேம நிதிக் கழகத்திலிருந்து மத்திய வைப்புத் தொகையக் கணக்கிற்கு (Central Depository Accounts) மாற்றும் பணிகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டு, சிங்கப்பூரின் பொருளியல் வெற்றியில் சிங்கப்பூரர்களுக்குப் பங்கு வழங்கும் முயற்சியாக ‘எஸ்டிஎஸ்’ திட்டம் அறிமுகம் கண்டது.

சிங்டெல் நிறுவனத்தின் பிற பங்குகளைப் போலல்லாமல், அவை மசேநிதிக் கழகத்தின்கீழ் வைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் குறிக்கோள் எட்டப்பட்டுவிட்டதையடுத்து, தற்போது அவை மத்திய வைப்புத் தொகையக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றன. இம்மாற்றம் குறித்த தகவல்கள், பங்குதாரர்களுக்கு, ஏப்ரல் மாத இறுதிக்குள் கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

ஏறத்தாழ 615,000 பேர் 710 மில்லியன் ‘எஸ்டிஎஸ்’ பங்குகளை வைத்துள்ளனர். அவற்றின் மதிப்பு 3.6 பில்லியன் வெள்ளியாகும்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) கூறப்பட்டதையடுத்து, மசே நிதிக் கழகம் அனைத்துப் பங்காளிகளுடன் இணைந்து, இம்மாற்றங்கள் தொடர்பில் பணியாற்றும். வரும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி இம்மாற்றம் முடிவடைந்தபின், மசே நிதிக் கழகம் இப்பங்குகளுக்கான அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளும்.

ஏப்ரல் 8ஆம் தேதி முதல், பங்குதாரர்கள் இவற்றை விற்க முடிவுசெய்யலாம். இக்குறிப்பிட்ட பங்கினை விற்போர்க்கு மசே நிதிக் கணக்கிலிருந்து பணம்பெறுவதற்கான நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

பங்குதாரர்கள் இப்பங்குகளை விற்காமல் தொடர்ந்து வைத்திருக்கவும் முடிவுசெய்யலாம். இம்முடிவுகளை எடுப்பதற்குக் காலக்கெடு ஏதுமில்லை.

முன்னரே மத்திய வைப்புத் தொகையக் கணக்கு வைத்திருப்போர்க்கு அக்கணக்கில் இப்பங்குகள் மாற்றப்படும். கணக்கு இல்லாதோர்க்கு, புதிய கணக்கு தொடங்கப்பட்டு அதில் மாற்றவும் ஆதரவளிக்கப்படும். வயது மூத்த, மத்திய வைப்புத் தொகையக் கணக்கு இல்லாத 20,000 பேரை, நிறுவனம் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் உதவியுடன் அணுகி ஆதரவளிக்கும்.

பங்குகளை விற்பதற்கு, ‘பிலிப் செக்யூரிட்டீஸ்’ இணையத்தளம், சிங்போஸ்ட் கிளைகளை நாடலாம். அல்லது, தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் பங்குச் சந்தை சில்லறைப் பங்கு வணிகர்கள் (SGX Retail Brokers) மூலமும் விற்கலாம்.

பங்குகளை விற்றுப் பணமாக்க விரும்புவோர்க்கு, விற்கப்பட்ட 14 நாள்களுக்குள் பணம், மசே நிதிக் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஏறத்தாழ 615,000 பேர் இப்பங்குகளை வைத்துள்ள நிலையில், அவர்களுள் ஆக இளையவர்க்கு வயது 50ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பலர் வயது மூத்தோராக இருப்பதால், மூத்தோர் தலைமுறைத் தூதர்களின் உதவியுடன் அணுகி விளக்கமளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்