பீஷான், தாம்சனில் 1,200 பயனர்களுக்கு இணையச் சேவை பாதிப்பு

பீஷான், தாம்சனில் 1,200 பயனர்களுக்கு இணையச் சேவை பாதிப்பு

1 mins read
ac3760ca-8f68-45de-b134-0b823657152f
நாட்டின் சில பகுதிகளில் சிங்டெல், ஸ்டார்ஹப் இணையச் சேவைகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) தற்காலிகப் பாதிப்பு ஏற்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 ஆகியவற்றின் இணையச்சேவைகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) கண்ணாடி இழை (ஃபைபர்) இணைப்புத் துண்டிப்பால் தற்காலிகப் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், பீஷான், தாம்சன் பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 1,200 இணையப் பயனர்களுக்கு இணைச்சேவைப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என ‘நெட்லிங்க் டிரஸ்ட்’ தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் தேசிய அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) கட்டமைப்பின் கண்ணாடியிழைக் கட்டமைப்பு வசதிகளை நெட்லிங்க் டிரஸ்ட் நிறுவனம் அமைத்து, நிர்வகித்து வருகிறது.

சேவைப் பாதிப்புக்கு மன்னிப்புக்கேட்டுக்கொண்ட அந்நிறுவனம், இணையச்சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணையச்சேவையை விரைந்து இயல்புநிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக பிற்பகல் 2.35 மணிக்குப் புதுப்பிக்கப்பட்ட பதிவில் நெட்லிங்க் டிரஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

சேவைத் துண்டிப்பால் தங்களது வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூக ஊடகப் பதிவுகளில் தெரிவித்துள்ளன.

சேவைத் தடங்கலைக் கண்காணிக்கும் ‘டௌன்டிடெக்டர்’ (Downdetector) தளத்தில் பிற்பகல் 1.40 மணியளவில் ஸ்டார்ஹப் பயனர்களிடமிருந்து 91 புகார்களும் பிற்பகல் 2.30 மணியளவில் சிங்டெல் பயனர்களிடமிருந்து 120 புகார்களும் பதிவாகின.

இச்சிக்கலை விரைந்து சரிசெய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் நெட்லிங்க் டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்