ஆஸ்திரேலியாவின் இரண்டாவது ஆகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ‘ஆப்டஸ்’.
சிங்கப்பூரின் ‘சிங்டெல்’ நிறுவனத்திற்குச் சொந்தமான அந்நிறுவனத்தின் அவசரத் தொலைபேசிச் சேவையில் செப்டம்பர் மாதம் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரச் சேவைகளின் உதவியை நாட முடியாமல் மூவர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.
கோளாற்றைச் சரிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக ‘சிங்டெல்’ கூறியது.
அவற்றில் ஆப்டஸ் கைப்பேசி கட்டமைப்பைக் கண்காணிக்க உலகளாவிய ஆலோசனை நிறுவனமான கியர்னியை அந்நிறுவனம் நியமித்துள்ளது முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை ஆப்டஸ் இயக்குநர் ஜான் ஆர்தர் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிட்டார்.
ஆஸ்திரேலிய தகவல் தொடர்பு அமைச்சர் அனிகா வெல்ஸ், சிங்டெல் குழுமத்தின் தலைமை நிர்வாகி யுயென் குவான் மூன், ஆப்டஸ் தலைமை நிர்வாகி ஸ்டீபன் ரூ ஆகியோருடன் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு இதனை அவர் அறிவித்தார்.
“எங்கள் நிறுவனம் செயல்பட்டுவரும் வட்டாரத்திற்குட்பட்ட சட்டங்களையும் விதிமுறைகளையும் நாங்கள் எப்போதும் மதித்து வருகிறோம், மேலும், மேம்பட்ட செயல்பாட்டை வழங்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பை ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு நாங்கள் வழங்குகிறோம். பிரச்சினைக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் இணைந்து பணியாற்றுவோம்,” என பிசினஸ் டைம்சிடம் சிங்டெல் தலைமை நிர்வாகி யுயென் தெரிவித்தார்.