406,000 பேருக்கு 477 மில்லியன் சிறப்புப் பங்குகளை சிங்டெல் மாற்றியது

406,000 பேருக்கு 477 மில்லியன் சிறப்புப் பங்குகளை சிங்டெல் மாற்றியது

கோப்புப்படம்: ஏஎஃப்பி

23 Nov 2026 - 12:04 pm

2 mins read

மத்திய சேமநிதி (மசேநி) கழகத்திடமிருந்து கிட்டத்தட்ட 406,000 பேரின் மத்திய வைப்புத்தொகை கணக்குகளுக்கு 477 மில்லியன் சிறப்புத் தள்ளுபடிப் பங்குகளை மாற்றும் பணியை சிங்டெல் நிறுவனமும் மசேநி கழகமும் நிறைவு செய்துள்ளன.

அந்தப் பங்குகளை மாற்றும் பணி நவம்பர் 21ஆம் தேதி நிறைவடைந்ததாக சிங்டெல் நிறுவனமும் மசேநி கழகமும் திங்கட்கிழமை (நவம்பர் 23) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

ஏப்ரல் மாதத்தில் அப்பணி தொடங்கியபோது, ஏறக்குறைய 615,000 சிங்கப்பூரர்கள் சிங்டெல் சிறப்புத் தள்ளுபடிப் பங்குகளை வைத்திருந்தனர். அவர்களில் 34 விழுக்காட்டினர், அதாவது 209,000 பேர் பங்கு மாற்றத்திற்கு முன்பே தங்களது பங்குகளை விற்றுவிட்டதாக சிங்டெல் நிறுவனமும் மசேநி கழகமும் கூறின.

பங்குகளை மாற்றும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், சிங்டெல் சிறப்புத் தள்ளுபடிப் பங்குகளை வைத்திருப்போர் தற்போது தங்களது பங்குகளை நேரடியாக வைத்திருந்து நிர்வகிப்பார்கள். மசேநி கழகம் இனி அவர்களின் அறங்காவலராகச் செயல்படாது.

சிங்டெல் சாதாரணப் பங்குகளையும் வைத்திருப்பவர்கள் எளிதில் நிர்வகிக்க, இரண்டு வகையான பங்குகளும் ஒரே மத்திய வைப்புத்தொகை கணக்கில் ஒருங்கிணைக்கப்படும் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்தன. 1993ஆம் ஆண்டு அக்டோபரில் சிங்டெல் பொதுப் பங்கு நிறுவனமாக மாறியபோது, சிங்டெல் சிறப்புத் தள்ளுபடிப் பங்குகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்திட்டத்தின் மூலம், மசேநி உறுப்பினர்களாக இருந்த சிங்கப்பூரர்கள் 1993ஆம் ஆண்டின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டின்போதும், பின்னர் 1996ஆம் ஆண்டில் தங்களது மத்திய சேமநிதியைப் பயன்படுத்தியும் தள்ளுபடி விலையில் சிங்டெல் பங்குகளை வாங்க முடிந்தது.

அந்த நேரத்தில், சிங்டெலின் சிறப்புத் தள்ளுபடிப் பங்குகளுக்கு மசேநி கழகம் அறங்காவலராக நியமிக்கப்பட்டது. அத்திட்டத்தின் மூலம் பங்குகளை விற்ற முதல், ஒரே நிறுவனம் சிங்டெல் ஆகும். அப்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் பங்குகளை வாங்கினர்.

குறிப்புச் சொற்கள்