சிங்டெல் நிறுவன முற்பாதி ஆண்டு லாபம் $3.4 பி. என கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிப்பு

2 mins read
6f6d8425-b364-4896-a1d7-b7cf6aacf396
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழ்கிறது சிங்டெல். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் டெலிகாம்ஸ் நிறுவனம், புதன்கிழமை (நவம்பர் 12), தனது முற்பாதி ஆண்டு லாபத்தில் 14 விழுக்காட்டு உயர்வைப் பதிவு செய்துள்ளது. இது அதன் ஆஸ்திரேலியப் பிரிவான ஆப்டஸ் மற்றும் வட்டாரப் பங்காளித்துவ நிறுவனங்களின் வலுவான செயல்திறனால் அதிகரித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல், செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கு அடிப்படை நிகர லாபம் S$1.35 பில்லியன் (US$1.04 பில்லியன்) என்று கூறியது. இது கடந்த ஆண்டு S$1.19 பில்லியனாக இருந்தது.

அது ‘விசிபல் ஆல்ஃபா’ நிறுவனத்தின் ஒருமித்த மதிப்பீடான S$1.37 பில்லியனைவிட சற்றுக் குறைவு.

இந்த அதிகரிப்புக்கு வட்டாரப் பங்காளித்துவ நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), ஏஐஎஸ் (AIS) ஆகியவற்றுடன் செயலாக்க நிறுவனங்களான என்சிஎஸ் (NCS), ஆப்டஸ் (Optus) ஆகியவை முக்கியக் காரணமாக இருந்ததாக சிங்டெல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாரதி ஏர்டெல், இந்தோனீசியாவின் டெல்காம்செல், தாய்லாந்தின் ஏஐஎஸ் உள்ளிட்ட வட்டாரப் பங்காளித்துவ நிறுவனங்களின் வரிக்குப் பிந்தைய பங்களிப்பு 12 விழுக்காடு அதிகரித்து S$0.92 பில்லியனாக உயர்ந்துள்ளது.

அதிக லாபம் தரும் 4ஜி, 5ஜி திட்டங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொண்டாலும், நிலையான சந்தாதாரர் சேர்க்கைகளாலும் பாரதி ஏர்டெல் காலாண்டு லாபத்தில் 89 விழுக்காட்டு உயர்வைப் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே, ஆப்டசின் செயலாக்க வருவாய் 2 விழுக்காடு உயர்ந்தது. அதன் பின்னர் கட்டணம் செலுத்தும் (postpaid) கைப்பேசித் திட்டங்களின் வளர்ச்சி மற்றும் வட்டாரத் தொடர்புக் கட்டமைப்பு-பகிர்வு ஒப்பந்தத்திலிருந்து அதிக வருவாய் ஆகியவை இந்த வருவாய் அதிகரிப்புக்கு உதவின.

“அதன் முதல் பாதி முடிவுகள், வட்டாரத்தில் உள்ள எங்கள் பன்முகப்படுத்தப்பட்ட வர்த்தகங்களின் தொகுப்பு முழுவதும் நேர்மறையான உத்வேகத்தைப் பிரதிபலிக்கின்றன,” என்று சிங்டெல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யுயென் குவான் மூன் தெரிவித்தார்.

“பொருளியல் கண்ணோட்டம் சவாலானதாகவே உள்ளது. மேலும் ஆப்டஸ் வர்த்தகம் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கிறது. எங்கள் வர்த்தகமும் புவியியல் பன்முகத்தன்மையும் குழுவின் செயல்திறனுக்கு நிலைத்தன்மையை அளிக்கின்றன,” என்று அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்