சீனாவின் சைனோபெக் நிறுவனம், சிங்கப்பூரின் புக்கோம் தீவிலும் ஜூரோங்கிலும் அமைந்துள்ள ஷெல் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையையோ பெட்ரோலியப் பொருள் தொழிற்சாலையையோ வாங்க விரும்பவில்லை.
சைனோபெக் நிறுவனத்தின் தலைவர் யு பாக்காய் திங்கட்கிழமை இதைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் அமைந்துள்ள ஷெல் நிறுவனத்தின் சொத்துகளை மறுஆய்வு செய்யும்படி கோல்ட்மன் சேக்ஸ் அணுகிய நிறுவனங்களில் சைனோபெக்கும் அடங்கும் என்று ராய்ட்டர்ஸ் சென்ற வாரம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சைனோபெக் தலைவரின் கருத்து வெளியாகியிருக்கிறது.
சவூதி அரேபியாவின் ஜஃபுரா ‘களிமண் பாறை’ எரிவாயுத் திட்டத்தில் பங்குபெற சைனோபெக் விரும்புவதாக திரு யு குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கம் அங்கு சுத்திகரிப்புத் தொழிற்சாலை அமைக்க விடுத்துள்ள அழைப்பைப் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான எண்ணெய், எரிவாயு நிறுவனமான சைனோபெக் இடைநிலை மதிப்பீட்டில் 20 விழுக்காட்டுச் சரிவைச் சந்தித்துள்ள வேளையில், ஹாங்காங்கில் நடைபெற்ற நிறுவனக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.


