காலமான தம்பியின் நினைவாக மலையுச்சிக்குச் சென்ற தமக்கை

2 mins read
6493e955-ce1a-4e32-8eda-5a09487afc5b
நவதீப்பின் புகைப்படத்தோடு மவுண்ட் கினபாலுவின் உச்சியில் நவதீப்பின் தமக்கை. - படம்: நவதீப்பின் தமக்கை/ஃபேஸ்புக்

2015ல் மவுண்ட் கினபாலுக்கு செல்லும் பள்ளிப் பயணத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டபோது 13 வயது நவதீப் சிங் ஜர்யல் அதீத உற்சாகமும் பெருமிதமும் அடைந்தார்.

தஞ்சோங் காத்தோங் தொடக்கப் பள்ளியிலிருந்து 8 ஆசிரியர்களோடு பயணம் மேற்கொண்ட 29 மாணவர்களில் இவரும் ஒருவர்.

2015ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி மலேசியாவின் சாபா மாநிலத்தில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

நவதீப் உட்பட 10 சிங்கப்பூரர்கள் இந்த நிலநடுக்கத்தில் மரணமடைந்தனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் கழித்து, காலமான தன் தம்பியின் நினைவாக, மவுண்ட் கினபாலுவின் உச்சிக்குச் சென்று பயணத்தை முடித்தார் அவரின் தமக்கை.

உணர்ச்சிபூர்வமான அனுபவம்

மலையின் உச்சிக்குச் செல்லும் பாதையில், அர்ப்பணிப்போடும் உறுதியோடும் பயணத்திற்குத் தயார் செய்த நவதீப்பின் இருப்பை உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.

எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் தன் தம்பியின் நினைவுகளைச் சுமந்த இப்பயணம், தன் வாழ்வின் உணர்ச்சிபூர்வமான அனுபவங்களுள் ஒன்று என்றார் அவர்.

“உடல்ரீதியாகப் பல சவால்களும் அதீத சிந்தனைகளும் பெரும் பாசமும் கொண்ட பயணம்,” என்று தன் பயணத்தை விவரித்தார்.

மலையின் உச்சிக்குச் சென்ற தருணம்

தனக்கான பயணமாக மட்டுமல்லாமல், நவதீப்புக்காகவும் நவதீப்பின் நண்பர்களுக்காகவும் மேற்கொண்ட பயணமாகவும் அவர் இதைக் கருதுகிறார்.

தஞ்சோங் காத்தோங் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், அவர்களோடு சென்ற சிங்கப்பூர் பயிற்றுவிப்பாளரும் நிலநடுக்கத்தில் மடிந்தனர்.

“நவதீப் எங்கள் வாழ்விற்கு சேர்த்த ஆனந்தத்திற்கும் அவனின் மனவுறுதிக்கும் இது ஒரு சமர்ப்பணம்,” என்றார் நவதீப்பின் தமக்கை.

“நவதீப் மலையின் உச்சிக்குச் செல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரின் உயிர் கினபாலுவின் ஒவ்வொரு சூரிய உதயத்திலும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது,” என்று சொன்னார் தமக்கை.

சாபா மாநிலத்தின் நிலைநடுக்கம்

2015ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி காலையில் நிகழ்ந்த 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சாபா மாநிலத்தை உலுக்கியது.

நவதீப் உட்பட, தஞ்சோங் காத்தோங் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் 8 ஆசிரியர்களும் ஃபெரெட்டா பாதையில் சென்று கொண்டிருந்தபோது தான் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காலமானவர்கள் மட்டுமின்றி, மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

2015ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, தேசிய நினைவு தினத்தின் மூலம் 10 பேரின் இழப்பைச் சிங்கப்பூர் துக்கமாக அனுசரித்தது.

அதோடு, மலேசியாவை சேர்ந்த ஆறு பேர், சீனாவைச் சேர்ந்த ஒருவர், ஜப்பானைச் சேர்ந்த ஒருவரும் நிலநடுக்கத்தில் தங்கள் உயிரை இழந்தனர்.

குறிப்புச் சொற்கள்