தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய வீடுகளுக்குத் தயாராகும் தோ பாயோ ஈஸ்ட் வட்டாரம்

2 mins read
1f3dd8b8-fab5-44a0-988d-75aa144779e5
கிம் கியட் அவென்யூ, தோ பாயோ ஈஸ்ட் சந்திப்பில் உள்ள புதிய வீடமைப்புக்கான காலிமனை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தோ பாயோ ஈஸ்ட் வட்டாரத்தில் இதற்கு முன்னர் கோல்ஃப் விளையாட்டுத் திடல் அமைந்திருந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருந்திட்டம் 2019ன் உத்தேசத் திருத்தங்களை நகர மறுசீரமைப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) வெளியிட்டது.

ஐந்து காற்பந்துத் திடல் அளவுள்ள 3.6 ஹெக்டர் நிலப்பரப்பு வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள விவரமும் அதில் இடம்பெற்று உள்ளது.

கிம் கியட் அவென்யூ, தோ பாயோ ஈஸ்ட் குறுக்குவட்டச் சந்திப்பில் அந்தப் பகுதி இடம்பெற்று உள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள குடியிருப்பு மேம்பாடு வீடமைப்புக்கான தேவையைச் சமாளிக்கும். அத்துடன் தோ பாயோ நகரில் உள்ள தற்போதைய வசதிகளை வருங்காலக் குடியிருப்பாளர்களும் அனுபவிக்கும் வகையில் திட்டம் அமையும்,” என்று ஆணையம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளது.

புதிய வீடுகள் கட்டப்பட இருக்கும் பகுதியின் அருகே தற்போது தோ பாயோ பலதுறை மருந்தகம், கிம் கியட் பால்ம் சந்தை மற்றும் உணவு நிலையம், செயின்ட் ஆண்ட்ரு உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி போன்றவை உள்ளன.

அந்தக் காலி மனையில் 1,100 முதல் 1,300 வரையிலான வீவக வீடுகளோ 1,650 முதல் 1,800 வரையிலான கூட்டுரிமை (கொண்டோமினிய) வீடுகளோ அமையக்கூடும் என்று பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட கிம் கியட் ரிப்பில்ஸ் பிடிஓ திட்டத்தில் இடம்பெற்றவை உள்ளிட்ட பல வீவக வீடுகள் அருகில் இருப்பதால் புதிய இடம் பெரும்பாலும் பொது வீடமைப்புக்கே பயன்படுத்தப்படலாம் என்று ஆரஞ்சுடீ குரூப் சொத்து நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் கிறிஸ்டைன் தெரிவித்து உள்ளார்.

மத்திய விரைவுச்சாலையின் அருகே அந்த இடம் அமைந்துள்ளதால், கொண்டோமினிய வீடுகளை வாங்குவோர் இரைச்சலைக் காரணம் காட்டலாம் என்பதால் கொண்டோமினிய பயன்பாட்டுக்குப் பொருத்தமான இடமில்லை என்று மேம்பாட்டாளர்கள் கருதக்கூடும் என்றார் அவர்.

Mogul.sg சொத்து நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சி அதிகாரி நிக்கலஸ் மாக் கூறுகையில், தோ பாயோ ஈஸ்ட்டில் வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்டு உள்ள இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிடிஓ திட்டம் வரலாம் என்றார்.

இருப்பினும், 2025 முதல் 2027 வரை 50,000 புதிய வீடுகளைக் கட்டும் இலக்கு உள்ளதால் ஒரே ஒரு திட்டத்திற்கே அந்த வட்டாரம் முழுவதையும் வீவக பயன்படுத்தும் சாத்தியமும் இருப்பதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்