அமெரிக்க வரிவிதிப்புக் கவலைகள் நீடிக்கிற நிலையில், ஆண்டின் இரண்டாம் பாதியில் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் நிலவரத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என புதிதாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஓசிபிசி வங்கி நடத்திய அந்த ஆய்வில் 1,600க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களின் முதலாளிகள் கலந்துகொண்டனர்.
அமெரிக்கா விதித்துள்ள வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தையின் பின்னணியில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றோரில் 57 விழுக்காட்டினர், இனி வரும் மாதங்களில் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் நிலவரம் மோசமடையலாம் அல்லது மாற்றமின்றி இதேநிலை தொடரலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இருப்பினும், நிலவரம் முன்னேற்றம் காணும் என எஞ்சிய 43 விழுக்காட்டு வர்த்தகர்கள் கருத்துக் கூறினர்.
‘ஓசிபிசியின் சிறிய, நடுத்தர வர்த்தக நிலவரம்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை புதன்கிழமை (ஜூலை 16) வெளியிடப்பட்டது.
சிறிய, நடுத்தர நிறுவன முன்னேற்றங்களைக் குறிக்கும் குறியீட்டையும் அந்த வங்கி வெளியிட்டது.
இரண்டாம் காலாண்டில் குறியீட்டில் முன்னேற்றம் காணப்பட்டது. முதல் காலாண்டில் 49.9 புள்ளிகளாக இருந்த குறியீடு 50.2 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குறியீடு 50க்கு மேல் சென்றால் வர்த்தக நிலவரத்தில் முன்னேற்றம் உள்ளது என்று பொருள்படும்.
சவால் மிகுந்த பொருளியல் நிலவரத்திலும் அடிக்கடி மாற்றம் காணும் புவிசார் அரசியல் சூழலிலும் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் முன்னோக்கிச் சென்றதை குறியீடு உணர்த்துகிறது.

