தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$191,300 பெறுமான போதைப்பொருள்கள் பறிமுதல்: அறுவர் கைது

1 mins read
ff2d699a-76d9-4d80-8f82-2f407178adcf
தோ பாயோ லோரோங் 1க்கு அருகில் உள்ள வீட்டில் போதைமிகு அபின், ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

இரண்டு தனிப்பட்ட சம்பவங்களில் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆறு ஆடவர்கள் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

$191,300 பெறுமான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் போதைமிகு அபின், ‘ஐஸ்’ ஆகியவையும் அடங்கும் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியது.

தோ பாயோ லோரோங் 1க்கு அருகில் உள்ள வீடு ஒன்றில், 54, 55, 56 வயதான மூன்று சிங்கப்பூரர்கள் புதன்கிழமை பிற்பகலில் கைதுசெய்யப்பட்டனர்.

வீட்டில் இருந்தவர்கள் உத்தரவுகளுக்கு இணங்க மறுத்ததால், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழையவேண்டியிருந்தது.

அங்கு சோதனையிட்டதில் 1,066 கிராம் போதைமிகு அபின், 556 கிராம் ‘ஐஸ்’, 89 கிராம் கஞ்சா, மூன்று எரிமின்-5 மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதற்கிடையே, அதே நாள் மாலையில் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வெளிநாட்டவர் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

மலேசியப் பதிவெண் கொண்ட வாகனம் ஒன்றில் இருந்த அவர்கள், பாதுகாப்புச் சோதனைகளுக்காக நிறுத்தப்பட்டனர். அவ்வாகனத்தில் கஞ்சா பொட்டலம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதன் தொடர்பில் மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்வாகனத்தில் இருந்த ஆடவர் மூவரும் கைதுசெய்யப்பட்டனர். கூடுதல் சோதனைகளுக்குப் பிறகு, மற்றொரு கஞ்சா பொட்டலம் வாகனத்திலிருந்து மீட்கப்பட்டது. இரண்டு பொட்டலங்களும் ஏறக்குறைய 1,013 கிராம் எடைகொண்டவை.

கைதானவர்களுக்கு எதிராக விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்