அரசாங்க ஊழியரைத் தகாத முறையில் சாடிய ஆடவர்மீது ஆறு குற்றச்சாட்டுகள்

அரசாங்க ஊழியரைத் தகாத முறையில் சாடிய ஆடவர்மீது ஆறு குற்றச்சாட்டுகள்

2 mins read
67c032ac-2904-4c08-afdb-8454386e24c9
துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 72 வயது மாணிக்கம் மனோகர்மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் அரசாங்க ஊழியர்க்கு எதிராகத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆடவர்மீது நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூன் 11) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹெனி சோவையும் நகரமன்ற ஊழியர்கள் சிலரையும் கடுமையாகச் சாடி, 72 வயது மாணிக்கம் மனோகர், மின்னஞ்சல்கள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கும் அக்டோபர் 6ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பல மின்னஞ்சல்களை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அடுத்தவர்களிடம் ஏமாற்றி பெறப்பட்ட பணத்தை வாங்கியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி குற்றவாளியைத் தம்முடன் வைத்திருப்பதாகவும் குற்றவாளியைப் போல நடந்துகொள்வதாகவும் திருவாட்டி சோவுக்கு மாணிக்கம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

நியோ யெங் குவாங் என்ற நகரமன்ற ஊழியர் ஒருவருக்கும் மாணிக்கம் மின்னஞ்சல் அனுப்பினார். அதில், திரு நியோ ஒரு ‘பயனற்ற நிர்வாகி’ என்றும் அவர் திருடியதாகவும் ஏமாற்றியதாகவும் மாணிக்கம் சாடினார்.

பிற நகரமன்ற ஊழியர்களையும் தரக்குறைவாகத் திட்டி மாணிக்கம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மாணிக்கம்மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதே சட்டத்தின்கீழ், அவர் இதற்குமுன் விசாரிக்கப்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

நகரமன்றம் அல்லது பொதுச் சேவை விவகாரங்கள் குறித்த குறைபாடுகளை உரிய இடங்களில் பொதுமக்கள் முன்வைக்கவேண்டும் என்று காவல்துறை நினைவூட்டியது.

சமூகத்துக்குச் சேவையாற்றும் அரசாங்க அதிகாரிகளையோ நகரமன்ற ஊழியர்களையோ துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்வதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று காவல்துறை எச்சரித்தது.

மாணிக்கத்தின் வழக்கு ஜூலை 9ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.

அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக தகாத முறையில் நடந்துகொள்வோருக்கு அதிகபட்சம் $5,000 வரை அபராதமும் 12 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்