கவனக்குறைவாக வாகனமோட்டி தனக்கும் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கும் காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக ஆறு ஓட்டுநர்கள் மீது புதன்கிழமையன்று (ஜூலை 24) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் இடைப்பட்ட ஏழு மாதங்களில் இந்த ஆறு விபத்துக்களும் நடந்துள்ளன.
அனைத்து வாகனமோட்டிகளும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தவறிழைக்கும் வாகன ஓட்டிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துக் காவல்துறை ஜூலை 24 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
48 வயது லீ சீ குவான், 60 வயது பாலின் கே ஷு லியாங், 48 வயது அங் கோக் லாம், 66 வயது சா சின் சியோங், 50 வயது டிரிசியா டாங் பீ ஃபெங், 57 வயது லீ கோக் லியான் ஆகியோர் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்.
அவர்களுக்கு 10,000 வெள்ளிக்குப் பிணை வழங்கப்பட்டது. இவர்களின் வழக்குகள் ஆகஸ்ட் மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்பட்டது.
2022ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது போக்குவரத்து விபத்துக்களால் உயிரிழப்பும் காயங்களும் 2023ஆம் ஆண்டு அதிகம் ஏற்பட்டுள்ளதாகப் பிப்ரவரி மாதம் வெளியான போக்குவரத்து காவல்துறையின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

