தீவு விரைவுச்சாலையில் மணிக்கு 79 கிலோமீட்டர் வேகத்தில் பேருந்தை ஓட்டிய ஆடவர் உட்பட கனரக ஓட்டுநர்கள் அறுவர் மீது வேக வரம்பை மீறியதாகச் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
30 வயதுப் பேருந்து ஓட்டுநர், ஆகஸ்ட் 31ஆம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வேக வரம்பை மீறியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்த விரைவுச் சாலையில் கனரக வாகனங்கள் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திற்குமேல் செல்லக்கூடாது. கனரக ஓட்டுநர்களான மற்ற ஐவரும் அதே போன்ற செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடையில் அவர்கள் வேக வரம்பை மீறி ஓட்டியதாக நம்பப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட கனரக ஓட்டுநர்கள் 30க்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் பேருந்து, சிமென்ட் கலவை, டிப்பர் டிரக் உள்ளிட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள். வேக வரம்பை மீறிய குற்றத்துக்கு $1,000 வரையிலான அபராதம், மூன்று மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

