மின்னணுக் கழிவு மறுசுழற்சியை மேலும் வசதியாக்கும் நோக்கில், ஆறு மாத கால முன்னோடித் திட்டத்தின்கீழ், குடியிருப்பாளர்கள் தங்கள் பழைய கைப்பேசிகள், கையடக்கக் கணினிகள், மடிக்கணினிகளை, குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஷாப்பி சேகரிப்பு நிலையங்களிலும் பாதுகாப்புப் பெட்டகங்களிலும் ஒப்படைக்கலாம்.
சிங்கப்பூரின் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் திட்டத்தைக் கையாளும் ‘ஆல்பா இ-வேஸ்ட் ஸ்மார்ட் ரீசைக்கிளிங்’ நிறுவனத்தின் இந்தப் புதிய முயற்சி, சாதனங்களில் உள்ள தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பாகக் கையாளப்பட்டு அழிக்கப்படுவதையும் உறுதிசெய்யும். மேலும் பயனர்கள் அழிப்புச் சான்றிதழையும் பெறுவார்கள்.
வசதி, தரவுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, பல குடியிருப்பாளர்கள் தங்கள் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் இன்னும் தயக்கம் காட்டுகிறார்கள் என்று, சனிக்கிழமையன்று (அக்டோபர் 10) கம்போங் அட்மிரல்டியில் நடைபெற்ற அனைத்துலக மின்னணுக் கழிவு தின நிகழ்வில் ஆல்பா செக்யூர்-ரீசைக்கிள் முயற்சியை அறிவித்த, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.
பல மின்னணுச் சாதனங்களில் புகைப்படங்கள், கணக்கு விவரங்கள், பணி ஆவணங்கள், தனிப்பட்ட தகவல்தொடர்புகள் உள்ளிட்ட ரகசியத் தகவல்கள் உள்ளன.
“மின்னணுச் சாதனங்களை மறுசுழற்சிக்காக முறையாக ஒப்படைக்கும்போது, மக்கள் கவலைப்படுகிறார்கள்,” என்று ஜனில் கூறினார்.
இந்த முன்னோடித் திட்டம், சிங்கப்பூரில் ஏற்கெனவே உள்ள மின்னணுக் கழிவு சேகரிப்புத் தெரிவுகளுடன் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில் தீவு முழுவதும் கிட்டத்தட்ட 1,200 மின்னணுக் கழிவுத் தொட்டிகள், பெரிய வீட்டு உபயோகப் பொருள்களை வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளும் இலவசச் சேவையும் அடங்கும்.
இந்தப் புதிய திட்டத்தின்கீழ், மக்கள் தங்கள் சாதனங்களைச் சில்லறை விற்பனைக் கடைகள், சில வீவக வீடுகள் உள்ளிட்ட ஏறக்குறைய 2,000 ஷாப்பி எஸ்பிஎக்ஸ் எக்ஸ்பிரஸ் சேகரிப்பு நிலையங்களிலும், சிங்கப்பூர் முழுவதும் உள்ள மஞ்சள் ‘பிக்’ பாதுகாப்புப் பெட்டகங்களிலும் இலவசமாக ஒப்படைக்கலாம்.
இணையத்தில் வாங்கப்பட்ட பொட்டலங்களைப் பெற்றுக்கொள்ள இந்த இடங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதால், அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவையாக இருக்கும்.
சிங்கப்பூரின் மின்னணுக் கழிவு மறுசுழற்சித் திட்டம் 2021ல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி 45,000 டன்னுக்கும் அதிகமான மின்னணுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஜனில் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டத்தட்ட 11,000 டன் சேகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
