சக ஊழியரை மானபங்கம் செய்த காவல்துறை அதிகாரிக்கு ஆறு மாதச் சிறை

சக ஊழியரை மானபங்கம் செய்த காவல்துறை அதிகாரிக்கு ஆறு மாதச் சிறை

படம்: பிக்சாபே

24 Nov 2026 - 6:00 pm

2 mins read

தம்மைவிட குறைந்த பதவி வகித்த பெண் காவல்துறை அதிகாரியை மானபங்கம் செய்த காவல்துறை அதிகாரி ஒருவருக்குத் திங்கட்கிழமையன்று (நவம்பர் 23) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர், குற்றம் புரிந்தவர்கள் ஆகிய இருவரின் பெயர்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதினன்று இந்த மானபங்கக் குற்றம் நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து பின்னர் மற்றவர்களிடம் தெரிவித்திருந்தபோதிலும், தாம் வேலை செய்யும் இடத்தில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்த விரும்பாததால் முறையான புகார் எதையும் அளிக்கவில்லை.

இச்சம்பவத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட அப்பெண் நான்கு நாள்கள் தொடர்ந்து அழுததுடன், மூன்று வாரங்களுக்கு மருத்துவ விடுப்பும் எடுத்துக்கொண்டார். 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் அந்த அலுவலகத்தில் பணியாற்றுவதை நிறுத்திக்கொண்ட போதிலும், இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து பலரிடம் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தனக்கு நேர்ந்த மானபங்கச் சம்பவம் குறித்து மற்றவர்களிடம் பகிர்ந்து வந்ததாக மனநல மருத்துவர்களிடம் அவர் தெரிவித்தார்.

அந்தச் சம்பவத்தின் பாதிப்பிலிருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று மனநல மருத்துவர் ஒருவர் அவரிடம் கூறினார். இதனைக் கேட்ட பிறகு, பாதிக்கப்பட்ட அப்பெண் 2024ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதியன்று காவல்துறையில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

தொடக்கத்தில் அப்பெண்ணுக்கு மானபங்கம் விளைவித்ததை மறுத்து வந்த அவர், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் அரைச் சம்பளத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உள்மட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மானபங்கம்சிறைகாவல்துறை

தொடர்புடைய செய்திகள்