பணம் தர மறுத்ததால் பெற்றோரைக் குத்தியவருக்கு ஆறு மாதச் சிறை

2 mins read
0aa3d31e-2977-42f5-95f7-3967d1dfedf7
பெற்றோருக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என நீதிமன்ற உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டபோதும், அந்த ஆடவர் குற்றங்கள் புரிந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2021ல் தம் பெற்றோரைத் துன்புறுத்தியதற்காக சீர்திருத்தப் பயிற்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈராண்டுகளுக்குள், ஆடவர் ஒருவர் பழைய வழிக்குச் சென்றார். தம் பெற்றோர் தமக்குப் பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களைக் குத்தினார்.

பெற்றோருக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என நீதிமன்ற உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டபோதும் அந்த 22 வயது ஆடவர் இக்குற்றங்களைப் புரிந்தார். பெற்றோருக்கு எதிரான இதற்கு முந்தைய குற்றங்கள் குறித்து விவரங்கள் நீதிமன்றத்தில் குறிப்பிடப்படவில்லை.

அச்சுறுத்தியது, வேண்டுமென்றே காயம் விளைவித்தது, தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவை மீறியது ஆகிய ஒற்றங்களை ஒப்புக்கொண்ட அந்த இளையருக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 13) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மாதர் சாசனத்தின்கீழ் அவருடைய பெற்றோர் பாதுகாக்கப்படுவதால் அந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

வேலையில்லாத அந்த ஆடவர், 60 வயது தாயாருடனும் 59 வயது தந்தையுடனும் வசித்து வந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் டான் பெய் வெய் நீதிமன்றத்தில் கூறினார்.

ஏப்ரல் 14ல் தங்கள் வீட்டின் வசிப்பறையில் தம் தந்தையிடம் அந்த ஆடவர் $5,000 கேட்டார். வழங்குவதற்கு தம்மிடம் இனி பணம் எதுவுமில்லை என்று தந்தை கூறியபோது, அவரின் தோள்பட்டையிலும் முதுகிலும் அந்த ஆடவர் குத்தினார்.

வசிப்பறையிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு, படுக்கை அறையிலிருந்து தாயார் வெளியே வந்தார். அவரது சட்டையைப் பிடித்து அவரிடம் அந்த ஆடவர் $5,000 கேட்டார். தம்மிடம் பணம் இல்லை என்று கூறிய தாயாரின் வலது காதில் அந்த ஆடவர் குத்தினார்.

பணம் தராவிட்டால் பெற்றோரை அடித்துக் கொன்றுவிட்டு கட்டடத்திலிருந்து தாம் குதித்துவிடுவதாக அந்த ஆடவர் அவர்களை மிரட்டினார்.

இதனால் அச்சமடைந்த அத்தம்பதியர், வீட்டைவிட்டுப் புறப்பட்டு காவல்துறையைத் தொடர்புகொண்டனர். ஏப்ரல் 21ஆம் தேதி அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்