பைஜுஸ் நிறுவனருக்கு ஆறு மாதச் சிறை

பைஜுஸ் நிறுவனருக்கு ஆறு மாதச் சிறை

2 mins read
f69f6f1f-d42c-49d3-a0d3-0ee267f292cc
பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன். - பட்ம்: புளூம்பர்க்

பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ள இந்தியாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ‘பைஜுஸ்’ நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

முன்னணித் தொழில்முனைவராகக் கருதப்பட்ட பைஜு ரவீந்திரன், தமது சொத்துகள் தொடர்பாக 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து இந்தச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சட்டபூர்வ உரிமையாளர் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வழக்கிற்கான செலவுத் தொகையான $90,000 செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பின் பைஜுஸ் நிறுவனத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் பைஜு ரவீந்திரனுக்கு, இத்தீர்ப்பு மேலும் ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தற்போது கத்தார் அரசுக்குச் சொந்தமான முதலீட்டு ஆணையத்தின் ஒரு துணை நிறுவனம், தனக்குச் சேர வேண்டிய கடன் தொகையைத் திரும்பப் பெறுவதற்காகச் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் பைஜுவுக்கு எதிராக வழக்கைத் தொடர்ந்துள்ளது.

“மதிப்பிற்குரிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் சிறைத்தண்டனை ஆணைக்குத் தற்காலிகத் தடை பெறவும் நாங்கள் தற்போது ஆலோசித்து வருகிறோம்,” என்று பைஜுஸ் தரப்பு வழக்கறிஞர் கிளாரன்ஸ் லுன் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் இந்தியாவின் மிக வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்த பைஜு ரவீந்திரன், தற்போது இந்தச் சிறைத்தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது சிங்கப்பூரில் இருக்கிறாரா அல்லது வேறு நாட்டில் உள்ளாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்